நிதி அமைச்சர் லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டை கைவிடுவதற்கு எடுக்கப்பட்ட முடிவு அரசியல் நோக்கம் கொண்டது அல்லது அந்த முடிவில் சட்டத்துறை தலைவர் (ஏஜி) டோமி தோமஸ் சம்பந்தப்பட்டுள்ளார் என்று கூறப்படுவதை சட்டத்துறை தலைவர் அலுவலகம் நிராகரித்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டுள்ள லிம் மற்றும் வணிகர் பாங் கி கூன் முன்வைத்த உண்மைகள் மற்றும் கருத்துகள் குறித்து முடிவெடுக்கும் கடமையைப் பெற்ற பின்னர் அவர்களுக்கு எதிரான வழக்கைக் கைவிடும் முடிவைத் தான் மட்டுமே எடுத்ததாக
மேல்முறையீடு மற்றும் விசாரணை பிரிவு / துணை அரசு வழக்குரைஞர் தலைவர் முகமட் ஹனாபியா ஸக்காரியா கூறினார்.
இதற்கு முன்னதாக, ஹனாபியா இந்த வழக்கில் எந்த வகையிலும் சம்பந்தப்படவில்லை.
இது சம்பந்தமான முடிவை நானே யாருடைய எந்த செல்வாக்கிற்கும் உட்படாமல் எடுத்தேன் என்பதை ஹனாபியா வலியுறுத்தினார்.
இந்த வழக்கில் புகார் செய்திருந்தவரை பிரதிநிதிக்கும் வழக்குரைஞர் நிறுவனத்திடமிருந்து தாம் ஒரு கடிதத்தைப் பெற்றிருந்ததாகவும், அக்கடிதத்தில் லிம் குவான் எங் மற்றும் பாங் லி கூன் ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை திரும்பப்பெறும் எந்த ஒரு திட்டத்திற்கும் ஆட்சேபம் தெரிவிப்பதாக கூறப்பட்டிருந்தது என்றும் ஹனாபியா தெரிவித்தார்.
“கிடைக்கக்கூடிய ஆதாரங்கள் மற்றும் கட்டுப்படுத்துகிற சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் நான் இந்த வழக்கில் முடிவெடுப்பேன் என்று நான் இக்கடிதத்திற்குப் பதில் அளித்தேன். அதை நான் நடுநிலை தவறாமல் செய்தேன். எனது பரிபூரணமான முன்னுரிமை நீதி”, என்று ஹனாபியா இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறுகிறார்.