போர்ட் டிக்சன் தேர்தல்: அம்னோவுக்கு இடம்விட்டு பாஸ் ஒதுங்கிக்கொள்ளும்

போர்ட் டிக்சன் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் பாஸ் போட்டியிடாது, அது அம்னோவுக்கு இடம்விட்டு ஒதுங்கிக்கொள்ளும் என பாஸ் உலாமா தலைவர் மாவோட்ஸ் முகம்மட் கூறினார்.

அந்த இஸ்லாமியக் கட்சி இடைத் தேர்தல் குறித்து புதன்கிழமை விவாதித்ததாகவும் அதில், பிகேஆர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்வார் இப்ராகிமை எதிர்த்துப் போட்டியிடும் அம்னோவுக்கு ஆதரவு வழங்குவது என்று முடிவானதாக அவர் சொன்னார்.

“நேற்று இடைத்தேர்தல் பற்றி விவாதித்தோம். அதில் அம்னோவுக்கு இடம்விட்டு ஒதுங்கிக்கொள்ள முடிவு செய்தோம்.

“நேரடிப் போட்டியே நல்லது. ஸ்ரீசித்தியா இடைத் தேர்தலில் அம்னோ பாஸுக்கு உதவியதுபோல் நாமும் அம்னோவுக்கு உதவுவோம்”, என்று மாவோட்ஸ் கோலா திரெங்கானுவில் இன்று கூறினார்.

எதிர்வரும் இடைத் தேர்தல்களில், சாபா, சரவாக் உள்பட, ஆளும்கட்சியை எதிர்த்து எதிர்க்கட்சிகளில் ஏதாவது ஒன்றுதான் போட்டியிடும் என மாவோட்ஸின் உதவியாளர் நிக் முகம்மட் நிக் முகம்மட் ஸவாவி நிக் சாலே கூறினார்.

“இப்போது ஒரு கட்டத்துக்கு வந்திருக்கிறோம். இனி இடைத் தேர்தல் எங்கு நடந்தாலும் அங்கெல்லாம் எதிரணியிலிருந்து ஒரு கட்சி மட்டுமே களமிறங்கும்”,என்றாரவர்.

இது எழுதப்படாத ஓர் ஒப்பந்தம்தான் ஆனாலும், எல்லா எதிரக்கட்சிகளும் அதை ஏற்றுக்கொண்டுள்ளன என்றாரவர்