அன்வார் இன்றிரவு கலந்து கொள்ளும் நிகழ்வுக்கு போலீஸ் அனுமதி வழங்கியது

ஜோகூர் செலத்தான் மாவட்டத்தில் இன்றிரவு பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி ஒன்றுக்கு போலீஸ் அனுமதி வழங்கியுள்ளது.

அந்த நிகழ்வுக்கான அனுமதி நேற்று பிற்பகல் பின்னேரத்தில் கொடுக்கப்பட்டதாக பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுதின் நசுத்தியோன் கூறினார்.

என்றாலும் திட்டமிடப்பட்டுள்ள மற்ற பல நிகழ்வுகளுக்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை என அவர் சொன்னார்.

“எங்கள் விண்ணப்பங்களில் சிலவற்றுக்கு பதிலே இல்லை. சில நிராகரிக்கப்பட்டன. சில வாய்மொழியாக நிராகரிக்கப்பட்டன,” என ஜோகூர் பாருவுக்கு அருகில் உள்ள பூலாய் ஸ்பிரிங் ஒய்வுத் தலத்தில் கட்சியின் 8வது தேசியப் பேரவை தொடக்கி வைக்கப்பட்ட பின்னர் சைபுதின் நிருபர்களிடம் கூறினார்.

போலீஸ் அனுமதிகள் இல்லாதது, தனது நிகழ்வுகளை அது தொடர்ந்து நடத்துவதற்குத் தடையாக இருக்காது என அவர் சொன்னார். நேற்று நிகழ்ந்த பல செராமாக்களுக்கு ஜோகூர் மக்கள் “நல்ல ஆதரவு” தந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

“நான் தாமான் டாயாவில் இருந்தேன். துணைத் தலைவர் அஸ்மின் அலி கூலாயில் இருந்தார். அங்கு எங்களுக்குக் கிடைத்த ஆதரவு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கிடைத்ததைக் காட்டிலும் அதிகமாக இருந்தது. ஏழாண்டுகளுக்கு முன்னர் நிலைமை வேறு விதமாக இருந்தது. ஆனால் இப்போது இதுதான் இயல்பான சூழ்நிலை,” என்றார் அவர்.

ஜோகூரிலிருந்து எங்களுக்குக் கிடைக்கும் “சமிக்ஞைகள்” 2008ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பேராக்கிலும் சிலாங்கூரிலும் எங்களுக்குக் கிடைத்த சமிக்ஞைகளை போன்றதாகும் என சைபுதின் சொன்னார்.

பேராக்கிலும் சிலாங்கூரிலும் அந்தத் தேர்தலில் பக்காத்தான் ராக்யாட் வெற்றி பெற்றது. ஆனால் பல உறுப்பினர்கள் கட்சி மாறியதால் பிஎன் பேராக் ஆட்சியைக் கைப்பற்றியது.

அதிகமான போலீசார் காணப்பட்டனர்

கேலாங் பாத்தாவில் நேற்றிரவு நிகழ்ந்த செராமா ஒன்றுக்கு மலேசியாகினி சென்றது. அதில் 200 பேர் கலந்து கொண்டிருந்தனர். அங்கு 50க்கும் மேற்பட்ட சீருடை அணிந்த போலீசார் கடமையில் ஈடுபட்டிருந்தனர். இரண்டு போலீஸ் வாகனங்களும் அங்கு நிறுத்தப்பட்டிருந்தன.

அன்வார், ஜோகூர் பிகேஆர் தலைவர் டாக்டர் சுவா ஜுய் மெங், அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் அப்துல் அஜிஸ் பேரி ஆகியோர் உரையாற்றிய அந்த நிகழ்வு நடந்த இடத்துக்கு முன்பு இருந்த பிகேஆர் கிளை அலுவலகத்துக்கு செல்லும் சாலையில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டிருந்தது.

ஜொகூர் செலத்தான் முழுவதும் நடைபெற்ற எந்த நிகழ்விலும் விரும்பத்தகாத சம்பவங்கள் ஏதும் நிகழவில்லை.

“சம்பவங்கள் ஏதுமில்லை. ஆனால் போலீசார் அதிகமாக நிறுத்தப்பட்டிருந்தது, கூட்டத்திற்குச் செல்ல வேண்டாம் என மக்களை அச்சுறுத்துவதாக இருந்தது,” என துணைத் தலைவர் அஸ்மின் அலி நிருபர்களிடம் கூறினார்.

அந்த மாவட்டத்தில் நடத்தப்பட்ட ஆறு செராமாக்களின் போது போலீசார் அதிக எண்ணிக்கையில் நிறுத்தப்பட்டிருந்தனர். ஆனால் பேச்சாளர்கள் தடுக்கப்படவில்லை.

ஏற்கனவே அனுமதி கொடுக்கப்பட்டு கடைசி நேரத்தில் ரத்துச் செய்யப்பட்ட அனுமதிகள் மீது சுவா ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் மொக்தார் முகமட் ஷரிப்-பிடம் அறிக்கை ஒன்றை வழங்குவார் என அஸ்மின் மேலும் கூறினார்.

போலீசார் பாதுகாப்பு காரணங்களுக்காக ஒரே ஒரு விண்ணப்பத்தை மட்டும் நிராகரித்ததாக நேற்று மலேசியாகினியிடம்  கூறிய மொக்தார்,  ரத்துச் செய்யபப்பட்ட அனுமதிகள் மீது போலீசில் புகார் செய்யுமாறு பிகேஆர் கட்சியைக் கேட்டுக் கொண்டார்.