பிரதமராக மலாய்க்காரர் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும் எனக் கூறுவதற்காக அரசமைப்பில் செய்யப்படும் எந்தத் திருத்ததையும் பக்காத்தான் ஆதரிக்காது என பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
அந்த விவகாரம் மீது பிகேஆர் இளைஞர் தலைவர் சம்சுல் இஸ்காண்டார் முகமட் அக்கின் ஆற்றிய கொள்கை உரை குறித்து அன்வார் கருத்துரைத்தார். சம்சுல் அம்னோவுக்குச் சவால் மட்டுமே விடுத்துள்ளார் என அவர் சொன்னார்.
(மலாய்க்காரப் பிரதமருக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் அரசமைப்பைத் திருத்துவது) இளைஞர் பிரிவு, பிகேஆர், பக்காத்தாம் ஆகியவற்றின் நிலை அல்ல.”
“அம்னோ மலாய்க்காரர்களைப் பற்றிப் பேசிக் கொண்டே இருப்பதால் சம்சுல் அம்னோவுக்குச் சவால் விடுத்தார். ஆனால் மலேசியா தற்போதைய அரசமைப்புக்கும் நியாயமான நீதியான கோட்பாடுகளுக்கும் கட்டுப்பட்டுள்ளது என்பதே அவருடைய நிலை ஆகும்,” என்றார் அன்வார்.
சம்சுல் நேற்று நிகழ்த்திய சர்ச்சைக்குரிய சொற்பொழிவால் ஏற்பட்டுள்ள சேதத்தை கட்டுப்படுத்த அன்வார் முயலுகிறார் என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது.
ஜோகூரில் பிகேஆர் தேசியப் பேரவை தொடக்கி வைக்கப்பட்ட பின்னர் அவர் நிருபர்களைச் சந்தித்தார். அரசமைப்புத் திருத்தத்தை பக்காத்தான் எம்பி-க்கள் ஆதரிக்க மாட்டார்கள் என்றார் அன்வார்.
“நாங்கள் அதனை ஆதரிக்க மாட்டோம். நடப்பு அரசமைப்பு விதிகளைத் தொடருவதே எங்கள் நிலை. எங்கள் நிலையை குழப்ப வேண்டாம்.”
சம்சுல் ஆற்றிய உரையின் ஒரு பகுதியை வாசித்த அன்வார், அந்த நிலை “தெளிவானது” என்றார். அவர் விடுத்த சவால் “வியூக அடிப்படையிலானது” எனக் கூறினார்.
சரியான வியூகத்தைத் தேர்வு செய்வது
“அவரது வியூகம் என்னுடையது அல்ல,” எனக் குறிப்பிட்ட அவர் பிகேஆர் இன்னும் முன்னேற்றகரமான சவாலை விடுக்க வேண்டும்,” என்பதை ஒப்புக் கொண்டார்.
“நாங்கள் ஆதரிக்காததால் எந்த அரசமைப்புத் திருத்தத்திலும் அம்னோ வெற்றி பெற முடியாது,” என்றார் அவர்.
பக்காத்தான் தலைவர்கள் குறிப்பாக அரசு சேவை அளவைக் குறைக்க வேண்டும் என டிஏபி பிரச்சாரப் பிரிவுத் தலைவர் டோனி புவா கேட்டுக் கொண்டது போன்ற விவகாரங்களில் கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும் என பிகேஆர் இளைஞர் தலைவர் கூறியது பற்றியும் அன்வார் கருத்துரைத்தார்.
பக்காத்தான் தலைமைத்துவம் அந்த விவகாரத்தை விவாதித்தது என்றும் புவா-வின் விளக்கத்தைச் செவிமடுத்தது என்றும் அவர் சொன்னார். அரசு ஊழியர் எண்ணிக்கையைக் குறைப்பது பக்காத்தான் நிலை அல்ல என்று ஒப்புக் கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
“நாங்கள் திறமையான நிர்வாகத்தைக் காண விரும்புகிறோம். ஆலோசகர்களிடம் கொடுக்கப்பட்டுள்ள பல கடமைகள் உயர் நிலை அரசு அதிகாரிகளிடம் திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும். 5 பில்லியன் ரிங்கிட்டுக்கு மேல் செலவு பிடிக்கும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் போன்ற விஷயங்கள் முடிவுக்கு வர வேண்டும்,” என்றும் அன்வார் குறிப்பிட்டார்.