அம்னோ இனவாதக் கட்சி என்பதை முஹைடின் மறுக்கிறார்

நாடு மற்றும் அரசாங்கத்தின் முதுகெலும்பாக திகழும் அம்னோவை மலாய்க்காரர்களும் மலாய்க்காரர் அல்லாதாரும் தொடர்ந்து நம்பலாம் என்று துணைப் பிரதமர் முஹைடின் யாசின் கூறுகிறார்.

தாமும் அம்னோவும் இனவாதிகளாக மாறி வருவதாகக் கூறப்படுவதற்கு எந்த அடிப்படையும் இல்லை என அம்னோ துணைத் தலைவருமான முஹைடின் சொன்னார்.

அம்னோ தலைவர்களில் ஒருவர் என்பதால் தாம் பாகுபாடு காட்டுவதாகச் சிலர் கூறலாம். ஆனால் எதிர்க்கட்சித் தலைவர்களும் தங்களது சொந்த அரசியல் தகராறுகளில் சிக்கியுள்ளனர். தங்கள் சொந்தக் கொள்கைகளைக் கூட தற்காக்க முடியாமல் தடுமாறுகின்றனர் என அவர் சொன்னார்.

“மலாய்க்காரர்கள் பிகேஆர்-ரை நம்பலாமா, அன்வார் இப்ராஹிமிடமிருந்து அவர்கள் எதையாவது எதிர்பார்க்க முடியுமா?  அரசமைப்பு, மலாய் உரிமைகள், மலாய்  ஆட்சியாளர்கள், மலாய் மொழி, மலாய்ப் பொருளாதாரம் ஆகியவற்றில் உள்ள கோட்பாடுகளை அவர்கள் தற்காக்க முடியுமா?

“நான் முடியாது என்றுதான் சொல்வேன். அவர்கள் மற்ற இனங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது ஒரு புறம் இருக்கட்டும். பல தடவைகளில் மலாய்க்காரர்களுடைய கோரிக்கைகளைக் கூட அவர்களால் பூர்த்தி செய்ய முடியவில்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது”, என அவர், 2011ம் ஆண்டுக்கான அம்னோ பொதுப் பேரவை தொடர்பில் புத்ராஜெயாவில் நடத்தப்பட்ட சிறப்பு செய்தியாளர் சந்திப்பில்  கூறினார்.

டிஏபி-யை மலாய்க்காரர்கள் நம்பலாமா?

அதே வேளையில் பாஸ் குழப்பத்தில் மூழ்கியுள்ளது. அது தனது அடிப்படை போராட்டத்திலிருந்து விலகிச் சென்று விட்டது.

“கிளந்தானில் நிலவும் அசுத்தமான தண்ணீர் பிரச்னையைக் கூட அவர்களால் தீர்க்க முடியவில்லை. டிஏபி-யுடம் கூட்டு சேர்வதற்காக அவர்கள் தங்கள் சொந்தக் கோட்பாடுகளையே விட்டுக் கொடுத்து விட்டனர். மலாய்க்காரர்கள் டிஏபி-யை நம்ப முடியுமா?” என அவர் கிண்டலாக வினவினார்.

“நாங்கள் மலாய் நலன்கள் பற்றிப் பேசும் போது நாங்கள் இனவாதிகள் என பொருள் கொள்ளக் கூடாது. மலேசிய சமூகத்தில் நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மலாய்க்காரர்கள், பூமிபுத்ராக்கள், முஸ்லிம்கள் ஆகியோரே பெரிய பிரிவினர் ஆகும்.”

“அம்னோவைத் தவிர மற்ற கட்சிகள் மீது மலாய்க்காரர்களுடைய நம்பிக்கையை வைப்பது பயனற்றது. மலாய்க்காரர்களுக்கு இன்னும் ஒரு கட்சி தேவை இல்லை என்பதை அம்னோ உறுப்பினர்கள் உணர வேண்டும். சில பலவீனங்கள் இருக்கின்றன. அவை சரி செய்யப்படும்,” என்றார் முஹைடின்.

2011ம் ஆண்டுக்கான அம்னோ பொதுப் பேரவை வரும் செவ்வாய்க்கிழமை தொடங்கி டிசம்பர் 3ம் தேதி வரை நடைபெறும்.

பெர்னாமா

TAGS: