நடப்பு தேர்தல் முறை, எதிர்க்கட்சிகள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதைத் தடுத்து விடும்

நடப்பு தேர்தல் முறையின் கீழ் புத்ராஜெயாவுக்கு செல்வதை மறந்து விடுமாறு தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான பிஎஸ்சி நாடாளுமன்றத் தேர்வுக் குழுவில் உள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு ஒய்வு பெற்ற ஒருவர் அப்பட்டமாக கூறியிருக்கிறார்.

இங் சாக் கூன் எனத் தன்னை வருணித்துக் கொண்ட அவர் தமது கூற்றுக்கு ஆதரவாக காணொளி சிலைடுகளை காட்டியதுடன் அவற்றின் அச்சுப் பிரதிகளையும் விநியோகம் செய்தார்.

அந்தக் குழு கோத்தாகினாபாலுவில் நேற்று  நடத்திய பொது விசாரணையில் பேசிய பலரில் அவரும் ஒருவர் ஆவார்.

அவர் வழங்கிய வரைபடத்தில் 222 வரிகள் இருந்தன. ஒவ்வொன்றும் அடுத்தடுத்து ஒன்றை விட ஒன்று பெரிதாக இருந்தன.

2008 பொதுத் தேர்தலில் எல்லாத் தொகுதிகளின் மக்கள் தொகை அடிப்படையில் அந்த வரைபடம் தயாரிக்கப்பட்டிருந்தது.

“நீல நிறத்தில் இருப்பது பிஎன் வெற்றி பெற்ற தொகுதிகள். சிவப்பு நிறத்தில் இருப்பது எதிர்க்கட்சிகள் பிடித்தவை. பிஎன் தொகுதிகள் மிக மிகச் சிறியவை. எதிர்க்கட்சித் தொகுதிகள் மிகப் பெரியவை. அங்கு என்ன நடக்கிறது?

“பெரிய தொகுதிகளில் உள்ள அனைத்து மக்களும் எதிர்க்கட்சிகளை விரும்புகின்றனர் என்பதும் சிறிய தொகுதிகளில் இருப்பவர்கள் பிஎன் -னை ஆதரிக்கின்றனர் என்பதும் தற்செயலாக நிகழ்ந்தது இல்லை. தேர்தல் ஆணையம் இந்த இடத்தில் பிஎன் எம்பி-க்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக எல்லா பிஎன் பகுதிகளையும் உட்பிரிவுகளாகப் பிரித்திருக்க வேண்டும்,” என்றார் அவர்.

பிஎன் வசம் இருக்கும் புத்ராஜெயாவில் 6008 வாக்காளர்களே உள்ளனர். ஆனால் எதிர்க்கட்சியிடம் உள்ள காப்பார் தொகுதியில் 112,224 வாக்காளர்கள் உள்ளனர். அந்த எண்ணிக்கை, புத்ராஜெயாவை விட 17 மடங்கு அதிகமாகும்.

காப்பாரில் 17 எம்பி-க்கள் இருக்க முடியும்

“நாம் காப்பார் தொகுதியை புத்ராஜெயா அளவுக்குப் பிரித்தால் காப்பார் தொகுதிக்கு ஒர் எம்பி-க்குப் பதில் 17  எம்பி-க்கள் இருப்பார்கள்.

எல்லாத் தொகுதிகளும் சம அளவில் இருக்குமானால் கடந்த பொதுத் தேர்தலில் நாடாளுமன்றத்தில் பிஎன் னுக்கும் பக்காத்தான் ராக்யாட்டுக்கும் இடையில் ஏழு இடங்கள் மட்டுமே வித்தியாசம் ஏற்பட்டிருக்கும். ஆனால் உண்மையில் 140க்கு 82 ஆக அந்த விகிதாச்சாரம் இருந்தது.

ஒரு கட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு அனைத்து சிறிய இடங்களை மட்டும் நம்பியிருந்தால் மக்களவையில் பெரும்பான்மையைப் பெற மொத்த வாக்குகளில் 15.4 விழுக்காடு வாக்குகளைப் பெற்றால் போதும் என்றும் இங், மதிப்பீடு செய்தார்.

“எதிர்க்கட்சிகள் புத்ரா  ஜெயாவுக்குத் தாங்கள் செல்ல முடியும் என எண்ணினால் அதனை மறந்து விடுவது நல்லது.”

அந்த இடத்தில் நாடாளுமன்றத் தேர்வுக் குழுவில் இடம் பெற்றுள்ள டிஏபி ராசா எம்பி அந்தோனி லோக்,  இடைமறித்து ” அது உண்மையில் மனதைத் தளரச் செய்து விட்டது”, என்றார்.

தேசிய சாரசரியில் மிகச் சிறிய தொகுதி 13 விழுக்காடு வாக்காளர்களை மட்டுமே கொண்டுள்ளது. ஆகப் பெரியது 228 விழுக்காடு வாக்காளர்களைக் கொண்டுள்ளது. பிரிட்டனில் அதற்கு நேர்மாறான நிலை என இங் சொன்னார். அங்கு தேசிய சாரசரியில் சிறிய தொகுதி 77 விழுக்காட்டையும் பெரிய தொகுதி 153 விழுக்காட்டையும் பெற்றுள்ளன.

“தேர்தல் ஆணையம் உண்மையாக நடந்து கொள்ள விரும்பினால் அது எல்லாத் தொகுதிகளையும் மறு நிர்ணயம் செய்ய வேண்டும். இது தில்லுமுல்லு மட்டுமல்ல. அப்பட்டமான மோசடியுமாகும்.”

அந்தக் கூற்றை நாடாளுமன்றத் தேர்வுக் குழுவைச் சேர்ந்த  இன்னொரு உறுப்பினரான டாக்டர் ஹட்டா ராம்லி ஒப்புக் கொண்டார். கிராமப்புறத் தொகுதி எனக் கருதப்படும் பாலிங் நாடாளுமன்ற தொகுதியில் வழக்கத்துக்கும் மாறாக 70,000 வாக்காளர்கள் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

“அந்தத் தொகுதியில் முன்பு பாஸ் கட்சி வெற்றி பெற்றதே அதற்குக் காரணம் ஆகும்”, எனக் கூறிய அவர் அது நேர்மையானதா என இங்-கிடம் வினவினார்.

“நேர்மையற்றது என்பது மிகவும் சாதாரணமான வார்த்தை. நான் வெளியில் பதில் கூறலாமா? எனப் பதில் அளித்த இங், உறுப்பினர்கள் பொருத்தமான மொழியைப் பின்பற்ற வேண்டும் என கூறும் நாடாளுமன்ற விதிகளைச் சுட்டிக் காட்டினார்.

மாநில வாரியாக புள்ளி விவரங்கள்

இங் பின்னர் மாநில வாரியாக புள்ளிவிவரங்களை சமர்பித்தார். அப்போது தமது சொந்தத் தொகுதியான “கங்காரை நீங்கள் மதிப்பீடு செய்ய முடியுமா?” என பிஎஸ்சி உறுப்பினரான முகமட் ராட்சி ஷேக் அகமட், இங்-கிடம் வினவினார்.

“நீங்கள் நெகிரி செம்பிலானை எடுத்துக் கொண்டால் நான் வெற்றி பெறும் வாய்ப்புக்கள் எப்படி இருக்கும் என்பதைக் காண விரும்புகிறேன்”, என லோக் வினவினார்.

அதற்குப் பதில் அளித்த இங்,” நான் ஆலோசனை கூறுவதற்கு உங்களுக்கு கட்டணம் விதிக்க வேண்டியிருக்கும்,” என்றார்.

“இங்-கின் 34 விழுக்காடு பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டால் மலேசியக் கூட்டரசு ஒப்பந்தத்திற்கு இணங்க சபா, சரவாக் மாநிலங்களுக்கான கூடுதல் இடங்களை குழு எப்படி சமாளிக்க முடியும்,” என இன்னொரு பிஎஸ்சி உறுப்பினரான போங் சான் ஒன் வினவினார். அதற்குப் பதில் அளித்த இங்,” உங்கள் நோக்கம் என்ன ?” என வினவினார்.

“தேர்தலில் வெற்றி பெற வேண்டுமா அல்லது வாக்குகள் சமமாகப் பிரிக்கப்பட வேண்டுமா? விருப்பங்கள் மாறுபாடாக இருந்தால் நாம் சமரசத்துக்கு வரவே முடியாது. அதற்கு பிஎன் பதில் சொல்ல வேண்டும். நான் ஒய்வு பெற்ற மனிதன்.”