அம்னோ உறுப்பினர்கள், கட்சி நலனை சொந்த நலனுக்கு மேலாகக் கருத வேண்டும்

வரும் செவ்வாய்க்கிழமை 2011ம் ஆண்டுக்கான அம்னோ பொதுப் பேரவை தொடங்குகிறது. அந்த வேளையில் அம்னோ உறுப்பினர்கள் கட்சி நலனை சொந்த நலனுக்கு மேலாகக் கருத வேண்டும் என அம்னோ தலைவருமான நஜிப் அப்துல் ரசாக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

கட்சி உறுப்பினர்கள் தியாகங்கள் செய்யவும் தயாராக இருக்க வேண்டும். கட்சி நலனுக்கு மேலாக சுய நலனையோ சொந்த உணர்வுகளையோ வைக்கக் கூடாது என்றும் அவர் சொன்னார்.

“பலர் கட்சியில் சேருகின்றனர். ஆனால் கட்சி உணர்வுகளையும் நோக்கங்களையும் நலன்களையும் கட்சி உறுப்பினர்கள் நன்கு அறிந்திருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். அதனையே 3.4 மில்லியன் அம்னோ உறுப்பினர்களுடைய மனத்தில் நிறுத்த நாங்கள் முயலுகிறோம்,” என பெர்னாமாவுக்கு தமது புத்ராஜெயா இல்லத்தில் அளித்த பேட்டியில் கூறினார்.

13வது பொதுத் தேர்தலுக்கு முன்னர், நிகழும் கடைசி பேரவை இது எனக் கருதப்படுகிறது. ஐந்து நாட்களுக்கு அது நடடைபெறும்.

அம்னோ உறுப்பினர்கள் கட்சி மீது பாசமும் நேசமும் வைத்திருக்க வேண்டும் எனவும் நஜிப் சொன்னார்.

“கட்சிக் கோட்பாடுகளில் அதுவும் ஒன்றாகும். நாங்கள் சொந்த வளப்பத்தைத் தியாகம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளவில்லை.”

கட்சியைப் பாதிக்கக் கூடிய விஷயங்கள் பற்றி அம்னோ உறுப்பினர்கள் எச்சரிக்கையாக இருப்பதோடு கட்சி நலனுக்குப் பாதகத்தை ஏற்படுத்தக் கூடிய எதனையும் செய்யக் கூடாது என்றும் அம்னோ தலைவர் கேட்டுக் கொண்டார்.

மலாய் நலன்களுக்கு அம்னோ தொடர்ந்து போராடும்

அம்னோ மலாய் நலன்களுக்குப் போராடவில்லை என்பதால் தாங்கள் ஒரங்கட்டப்படுவதாக மலாய்க்காரர்கள் எண்ணுவதாகக் கூறப்படுவதை மறுத்த நஜிப், மலாய்க்காரர்களுக்கான அம்னோ போராட்டம் தொடரும் என்றார்.

“அது உண்மையல்ல. நாங்கள் ஒரே மலேசியா சுலோகத்தை பெற்றிருந்தாலும் பூமிபுத்ராக்களுக்கான போராட்டம் ஒய்ந்து விட்டதாக நாங்கள் ஒரு போதும் கூறியதில்லை. உண்மையில் அது தாம் எங்கள் முக்கியப் போராட்டம். அது தேசியப் போராட்டத்தில் ஒரு பகுதியுமாகும்.”

TAGS: