அமைதியாகக் கூடும் மசோதாவில் திருத்தங்கள் செய்யப்பட்டாலும் அதற்கு எதிராக வாக்களிக்கப் போவதாக பக்காத்தான் ராக்யாட் எம்பி-க்கள் அறிவித்துள்ளனர். அந்த மசோதா மீது மக்களவை அடுத்த வாரம் விவாதம் நடத்தவிருக்கிறது.
அந்த மசோதா மீட்டுக் கொள்ளப்பட வேண்டும் என்ற பக்காத்தான் ராக்யாட் முடிவில் பிகேஆர் உறுதியாக இருப்பதாக அதன் தலைமைச் செயலாளர் சைபுதின் நசுத்தியோன் கூறினார்.
மாச்சாங் தொகுதிக்கான எம்பி-யுமான அவர், ஜோகூரில் நடைபெறும் பிகேஆர் பேரவையில் நிருபர்களிடம் பேசினார்.
“கடந்த வாரம் நிகழ்ந்த பக்காத்தான் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட எங்கள் அதிகாரத்துவ நிலை மிகவும் தெளிவானது. அந்த மசோதா மீட்டுக் கொள்ளப்பட வேண்டும். அங்கும் இங்கும் திருத்தங்கள் செய்வதை ஏற்க முடியாது,” என்றார் அவர்.
அந்த மசோதாவில் பல பகுதிகள் திருத்தப்படும் என நேற்று பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் கூறியதாக அறிவிக்கப்பட்டது. 30 நாட்கள் முன் கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்பதை 10 நாட்களாகக் குறைப்பதும் அவற்றுள் அடங்கும்.
மற்ற திருத்தங்கள் வருமாறு:
அந்த அறிவிப்பு கொடுக்கப்பட்ட 24 மணி நேரத்துக்குள் போலீசார் தங்கள் முடிவை ஏற்பாட்டாளர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்பதும் திருத்தங்களில் ஒன்றாகும். சமர்பிக்கப்பட்டுள்ள மசோதாவில் அது 48 மணி நேரம் எனக் குறிக்கப்பட்டிருந்தது.
ஏற்பாட்டாளர்கள் ஆறு நாட்களுக்கு முறையீடு செய்து கொள்ளலாம் என்பது 48 மணி நேரமாகக் குறைக்கப்படும்.
மசோதாவில் பல பகுதிகளில் காணப்படும் அதிருப்தி என்னும் சொல் நீக்கப்படும்.
அந்தத் திருத்தங்கள் செய்யப்பட்டாலும் அரசமைப்பு உத்தரவாதம் அளித்துள்ள சுதந்திரத்தைக் குறிப்பாக சாலை ஆர்ப்பாட்டங்களுக்கு விதிக்கப்படும் முழுமையான தடை மீறுவதாக சைபுதின் குறிப்பிட்டார்.
“எதிர்ப்புக்களை ஒடுக்கும் பாரம்பரிய வழிகளுக்கு அப்பால் செல்வதற்கு அரசாங்கம் தயாராக இல்லை என்பதையே அது காட்டுகிறது,” என்றார் அவர்.