குறைந்தபட்ச சம்பளம் கோரும் போராட்டவாதிகளை அமைச்சர் நாடாளுமன்றத்திற்கு வெளியில் சந்தித்தார்

 

நாடாளுமன்றம். பக்கத்தான் அரசாங்கம் அறிவித்துள்ள ரிம50 குறைந்தபட்ச சம்பள உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் இறங்கிய 300க்கு மேற்பட்டவர்களை நாடாளுமன்றத்திற்கு வெளியில் மனித வள அமைச்சர் மு. குலசேகரன் சந்தித்தார்.

அப்போராட்டவாதிகளின் சுமார் 20 பிரதிநிதிகள் அந்த விவகாரம் குறித்து விவாதிக்க குலசேகரனுடன் பின்னர் நாடாளுமன்றத்திற்குள் சென்றனர்.

மலேசிய தொழிற்சங்க காங்கிரஸால் (எம்டியுசி) ஏற்பாடு செய்யப்பட்ட அந்தக் கண்டனப் போராட்டம் அரசாங்கம் எதிர்வரும் ஜனவரி 2019 அமலாக்கவிருக்கும் குறைந்தபட்ச ரிம1050 மாத சம்பளத்தை மறுஆய்வு செய்யக் கோருவதற்காகும்.

இதற்கு முன்னதாக, வாழ்க்கைச் செலவினம் அதிகமாக இருப்பதால் இந்த ரிம1050 உண்மை நிலைக்கு எதிர்மாறானது என்று எம்டியுசி கண்டித்துள்ளது.

கண்டனம் தெரிவிக்க கூடியிருந்த போராட்டவாதிகள் தொழிலாளர் ஆதரவு சுலோகங்களை முழங்கிக் கொண்டிருந்ததோடு “குறைந்தபட்ச சம்பளத்தை உயர்த்துங்கள்” என்று குரல் கொடுத்தனர்.

“வாக்களிப்பு முடிந்த பின்னர், அவர்கள் எங்களைப் பற்றி மறந்து விட்டார்கள்”, என்று ஒரு பெண் போராட்டவாதி முழங்கினார்.