சேவியர்: ‘எச்சரிக்கை கடிதம்’ தமது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சி

 

பிகேஆர் உதவித் தலைவர் சேவியர் ஜெயக்குமார் கட்சியின் புகார்கள், மேல்முறையீடு மற்றும் ஒழுங்குமுறை குழுவிடமிருந்து எச்சரிக்கை கடிதம் எதையும் பெறவில்லை என்று கூறினார்.

அவருக்கு எதிராகப் புகார்கள் பெறப்பட்டதைத் தொடர்ந்து எச்சரிக்கை கடிதம் சேவியருக்கு அனுப்பப்பட்டதாக கட்சி-தொடர்புடைய ஒரு வலைத்தளத்தில் இன்று கூறப்பட்டது.

இன்று இரவு மணி 7.00 வரையில் தாம் எந்த ஒரு கடிதத்தையும் அக்குழுவிடமிருந்து எந்த விதத்திலும் பெறவில்லை என்று கூறிய சேவியர், எனக்குத் தெரிவிக்காமல், எனக்கு எதிராகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க எனக்கு வாய்ப்பு அளிக்காமல், மேற்கொண்டு விசாரணை நடத்தாமல் இக்குழு எப்படி முடிவெடுக்க முடியும் என்று அவர் வினவினார்.

இந்த விவகாரம் குறித்து நான் அந்தக் குழுவிடமிருந்து கடிதமோ, அறிவிப்போ பெறவில்லை என்பதை வலியுறுத்துகிறேன் என்று கூறிய சேவியர், இது என்னை கொடியவனாகக் காட்டும் நோக்கம் கொண்டது என்று நம்புகிறேன் என்றார்.

“இந்த விவகாரம் குறித்து மேற்கொண்டு விளக்கம் பெறுவதற்காக நான் இக்குழுவின் தலைவர் சைட் ஹுசின் அலியை பிற்பகல் மணி 4.15 அளவில் தொடர்பு கொண்டேன். அவர் இன்று வரையில் அக்குழுவின் சார்பில் கையொப்பமிடுவதற்கோ, வெளியிடுவதற்கோ எந்த எச்சரிக்கை கடிதத்தையும் பெறவில்லை என்று அவர் விளக்கம் அளித்தார்”, என்று சேவியர் தெரிவித்தார்.