ஷாரிஸாட் அம்னோ பொதுப் பேரவையில் என்எப்சி மீது விளக்கமளிப்பார்

அம்னோ மகளிர் தலைவி ஷாரிஸாட் அப்துல் ஜலில்,  என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனத்தில் தமது ஈடுபாடு குறித்த குற்றச்சாட்டுக்களுக்குப் புதன்கிழமை அம்னோ பொதுப் பேரவையில் பதில் அளிப்பார்.

“அந்தப் பிரச்னை விவாதிக்கப்படுவதில் எந்தப் பிரச்னையும் இல்லை,” என ஷாரிஸாட் நிருபர்களிடம் கூறினார். அந்த விவகாரம் மீது பேராளர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அவர் தயாராக இருக்கிறாரா என நிருபர்கள் கேட்ட போது அவர் அவ்வாறு சொன்னார்.

தம்மைக் குறை கூறுகின்றவர்களை தமது கொள்கையுரை இலக்காகக் கொண்டிருக்கும் எனத் தெரிவித்த அவர், என்எப்சி சார்பாக தாம் பேச முடியாது என்றார். காரணம் நான் அதில் சம்பந்தப்படவில்லை எனச் சொன்னார்.

என்றாலும் அந்த விவகாரம் மீது தாம் பொது மக்களுக்கு தகவல் கொடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

தலைவர் என்ற முறையில் தாம் பொறுமையாக இருக்க வேண்டும் என்றும் தம்மை எதிர்ப்பவர்கள், தாம் வழி நடத்தும் மகளிர் பிரிவைக் கண்டு அஞ்சுவதாகவும் ஷாரிஸாட் சொன்னார்.

“நாங்கள் ஒன்றுபட்டுள்ளதாலும் கடுமையாக உழைப்பதாலும் மக்களுக்குச் சேவை செய்ய எப்போதும் களத்தில் இருப்பதாலும் அவர்கள் எங்களைக் கண்டு அஞ்சுகின்றனர்.”

பக்காத்தான் ராக்யாட் தொடுக்கும் ஒவ்வொரு தாக்குதலுக்குப் பின்னரும் அம்னோ மகளிர் பிரிவு வலுவடையும் என்றும் அதன் தலைவி சொன்னார்.

ஷாரிஸாட் நடப்பு அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார். அதனால் அவரது கணவர் முகமட் சாலே இஸ்மாயிலுக்கும் அவரது புதல்வர்களுக்கும் அரசாங்கம் என்எப்சி திட்டத்தை வழங்கியதில் சுய நலன்கள் ( conflict of interest ) சம்பந்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

முகமட் சாலே,  என்எப்சி-யின் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார். அந்த நிறுவனம் ‘குழப்பத்தில்’ மூழ்கியிருப்பதாக 2010ம் ஆண்டுக்கான தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

அந்த நிறுவனத்தைக் குறை கூறுகின்றவர்கள் குறிப்பாக பிகேஆர், என்எப்சி-யின் நிதி அறிக்கைகளை அலசி ஆராய்ந்து குறைந்த வட்டியில் அரசாங்க கொடுத்த 250 மில்லியன் ரிங்கிட் கடனைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறிக் கொண்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து ஷாரிஸாட் பதவி துறக்க வேண்டும் என அவருடைய அம்னோ சகாக்களில் சிலர் கேட்டுக் கொண்டனர். ஆனால் ஷாரிஸாட்டுக்கு துணைப் பிரதமர் முஹைடின் யாசின் வலுவான ஆதரவை வழங்கி வருகிறார்.

TAGS: