பாஸும் அம்னோவும் ஒன்றிணைவது நடவாத காரியம்

பாஸும் அம்னோவும் வெவ்வேறு கொள்கைகளைக் கொண்டவை என்பதால் இரண்டும் ஒன்றிணைவது முடியாத செயல் என்கிறார் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங்.

இரண்டின் கொள்கைகளும் வெவ்வேறானவை, பாஸ் இஸ்லாத்தை அடிப்படையாகக் கொண்டது. அம்னோ இன அடிப்படையில் அமைந்தது என்று ஹாடி கூறியதாக த ஸ்டார் அறிவித்துள்ளது.

“ஆனால், ஒத்துழைப்பதும், ஒன்றை ஒன்று புரிந்துகொண்டு நடப்பதும் சாத்தியமே”, என்றாரவர்.

நாளைய பேரணி பற்றிக் குறிப்பிட்ட ஹாடி, இரண்டு கட்சிகளும் “பலத்தைக் காண்பிப்பதற்காக” ஒன்று சேர்வதாகக் கூறினார்.

“சுதந்திரத்துக்கும்முன் கூட்டரசு அரசமைப்பில் இஸ்லாம் அதிகாரப்பூர்வ சமயமாக குறிப்பிடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்த காலனிவாதிகளுக்கு எதிராக ஒன்று சேர்ந்ததுபோல் இப்போதும் ஒன்று சேர்கிறோம்”, என்றாரவர்.

“ஐசெர்ட் குறித்து பக்கத்தான் ஹரப்பான் தலைவர்கள் விடுத்த மாறுபட்ட அறிக்கைகளால் நாடு குழம்பிப் போயுள்ளது” என்று குறிப்பிட்டு நாட்டைக் காக்கவே அப்பேரணி என்றும் அவர் சொன்னார்.