மஇகாவின் தலைமைத்துவமும் சாதி பிரிவினைகளும்

இராகவன் கருப்பையா – ம.இ.கா.வில் எப்படிப்பட்ட திறமைசாலிகள் அங்கத்தினர்களாக இருந்தாலும் அவர்களில் பலர் கட்சியின் மேல் மட்டத்திற்கு முன்னேர முடியாமல் போனதற்கு ‘ சாதி ‘ எனும் ஒரு கொடுமை தடைக்கல்லாக இருந்து வந்துள்ளது.

தற்போது விக்னேஸ்வரன் தலைமையில் சாதி பிரிவினைகள் அற்ற கட்சியாக மஇகா மாற்றம் காணும் சூழலில் உள்ளது என்பதை அவரின் செயாலாக்கம் வழி உணரலாம்.

இந்தக் சாதிகள் சார்ந்த கொடூரம் காலங்காலமாகவே ஒரு கொடிய நோயைப் போல அக்கட்சியை பீடித்திருந்தது அதன் உறுப்பினர்கள் மட்டுமின்றி மற்றவர்களுக்கும் நன்றாகவேத் தெரியும்.

எனினும் எதிர்மறையான விளைவுகளை எதிர்நோக்க வேண்டியிருக்குமே எனும் அச்சத்தில் கட்சி உறுப்பினர்கள் அது பற்றி வெளிப்படையாக பேசுவதில்லை.

ஆனால் அக்கட்சியின் தற்போதையத் தலைவர் விக்னேஸ்வரன் இதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்துவிட்டதாகத் தெரிகிறது.

தனது தலைமைத்துவத்தில் சாதி வேற்றுமைக்கு துளியளவும் இடமளிக்காதவாறு கட்சியை அவர் வழிநடத்திச் செல்வதாக பேசப்படுகிறது.

ம. இ.கா.விற்கு முன்பிருந்த பலம் தற்போது இல்லை எனும் போதிலும் உயர் கல்வி கற்றவர்களும் திறமைசாலிகளும் அக்கட்சியின் மேல்மட்டத்திற்கு முன்னேற தற்போது சாதி ஒரு தடங்கலாக இல்லை என்பது மகிழ்ச்சியான விடயம்தான்.

கடந்த காலங்களில், குறிப்பாக சாமிவேலு மற்றும் சுப்ரமணியம் சின்னையா போன்றோரின் தலைமைத்துவத்தில் சாதிக் கொடுமை உச்சத்தில் இருந்ததாக நம்பப்படுகிறது. உதரணமாக காலம் சென்ற எம் ஜி பண்டிதனுடைய வரலாறு ஒரு நல்ல உதாரணம்.

சாதி வேற்றுமையால் புறம்தள்ளப்பட்ட எண்ணற்றத் திறமைசாலிகள் பிறகு அரசியல் பக்கமே தலைவைக்காமல் ஒதுங்கிய கதைகள் பல உண்டு.

உதாரணத்திற்கு, மலேசிய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் பாஸ்கரன் கடந்த 1980களில் துடிப்புமிக்க ஒரு இளைஞராக ம.இ.கா.வில் தடம்பதித்த போதிலும், சாதி பிரிவினைக்கு பலியாகி வஞ்சிக்கப்பட்டார்.

கட்சித் தேர்தலில் மத்திய செயலவைக்குப் போட்டியிட்டு அதிகப் பெரும்பான்மையில் முதல் நிலையில் வெற்றி பெற்ற போதிலும், அவர்களுடைய சாதியைச் சேர்ந்திராத ஒரே காரணத்திற்காக தாம் ஒதுக்கப்பட்டதாக பாஸ்கரன் கூறினார்.

அண்மையில் அவர்  பிரசுரம் செய்த, ‘வரலாறு கண்ட சகாப்தம்:  மூன்று தலைமுறையின் பயணம்,’ எனும் சுயசரிதையில் இந்த வேதனையை அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

“நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றத் தொகுதி ஒன்றில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும், இல்லாவிட்டால் குறைந்தபட்சம் மேலவை உறுப்பினராக நியமனம் கிடைக்கும்,” என வாக்குறுதி வழங்கியப் பிறகும் ‘சாதி’ எனும் அரக்கன் குறுக்கே பாய்ந்ததால் கடைசி நேரத்தில் தமது வாய்ப்பு பறிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

ஆக இத்தகைய அநியாயங்களுக்கு இலக்காகி பல நல்லத் தலைவர்களை கடந்த காலங்களில் இழந்த ம.இ.கா. மீண்டும் இது போன்ற பாதாளத்தில் விழாமல் பார்த்துக் கொள்வது அவசியமாகும்.

அந்த வகையில் விக்னேஸ்வரனின் தற்போதைய தலைமைத்துவத்தை பாராட்டலாம், கண்காணித்து .பரீட்சித்தும் பார்க்கலாம்.