தேசிய உயர்க் கல்வி கடன் நிதி(பிடிபிடிஎன்)யிலிருந்து கடன் வாங்கியர்கள் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காகக் கொண்டுவரப்பட்ட திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
“சம்பளத்தில் பிடித்தம் செய்யும் திட்டம் அதில் சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்பினரிடமிருந்தும் பின்னூட்டம் பெறப்படும்வரை நிறுத்தி வைக்கப்படுகிறது”, எனக் கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக் இன்று டிவிட் செய்திருந்தார்.
புதிதாக அறிவிக்கப்பட்ட திட்டத்தின்படி பிடிபிடிஎன் கடன் வாங்கியவர்கள் மாதம் ரிம2,000-க்குமேல் சம்பளம் பெறுபவர்களாக இருந்தால் அவரகளின் சம்பளத்தில் இரண்டு விழுக்காட்டிலிருந்து 15விழுக்காடுவரை பிடித்தம் செய்யப்படும்.
இந்தப் புதிய திட்டத்தை ஏற்கனவே கடனை முறையாக திருப்பிச் செலுத்தி வருவோர் கடுமையாகக் குறைகூறினர்.
அரசியல்வாதிகள், அரசாங்கத்தில் உள்ளவர்களும் எதிரணியைச் சேர்ந்தவர்களும், அத்திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
பிடிபிடிஎன் தலைவர் வான் சைபுல் வான் ஜான், திட்டத்தைத் தற்காத்துப் பேசினார். இளம் தலைமுறையினர் பல்கலைக்கழகம் செல்ல அது அவசியம் என்றாரவர்.