தொழிலாளர்கள் சுரண்டப்படுகிறார்கள் என்பதை டோப் குலோவ் மறுக்கிறது, விசாரணை தொடர்ந்து கொண்டிருக்கிறது

 

டோப் குலோவ் நிறுவனம் (Top Glove) அதன் வெளிநாட்டுத் தொழிலாளார்கள் சுரண்டப்படுகிறார்கள் என்று பிரிட்டனின் த கார்டியன் நாளிதழ் வெளியிட்டுள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.

எனினும், சில தொழிலாளர்கள் விதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச 104-மணி நேரத்திற்கு கூடுதலாக ஓவர்டைம் வேலை செய்திருக்கலாம் என்பதை டோப் குலோவ் நிறுவனத்தின் தலைவர் லிம் வீ சாய் ஒப்புக்கொண்டார். இந்த நடைமுறையை நிறுத்துவதற்கு அது உறுதி கொண்டுள்ளது.

அவ்வாறு கூடுதல் நேரம் வேலை செய்த தொழிலாளர்களின் சரியான எண்ணிக்கையைக் கொடுக்க அவரால் இயலவில்லை.

த கார்டியன் அம்பலப்படுத்தியுள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக்கப்பட்டுள்ளது, கூடுதல் நேர வேலை வாங்குதல், கடன் அடிமைத்தனம், சம்பளம் நிறுத்தி வைக்கப்படுதல் மற்றும் கடப்பிதழ் பறிமுதல் போன்றவற்றை லிம் நிராகரித்தார்.

இன்று, மெருவில் இருக்கும் டோப் குலோவ் தொழிற்சாலையைச் சுற்றிப்பார்த்த மனிதவள அமைச்சர் எம். குலசேகரன் இந்த நிறுவனத்தை விசாரிக்கும் நடவடிக்கையை தொழிலாளர் இலாகா மேற்கொண்டுள்ளது என்று கூறினார்.

விசாரணை நடந்து கொண்டிருக்கிறது

தவறுகள் ஏதேனும் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அந்நிறுவனத்திற்கு எதிராக வேலைச் சட்டம் 1955, செக்சன் 99-இன் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் என்று குலா கூறினார்.

தொழிலாளர் இலாகா டோப் குலோவ்விற்குச் சொந்தமான 35 தொழிற்சாலைகளில் 22 தொழிற்சாலைகளுக்கு வருகை மேற்கொண்டுள்ளது.

நாங்கள் விசாரணை நடத்திக்கொண்டிருக்கிறோம், உண்மை என்றால் நாங்கள் ஆவணங்களை சட்டத்துறை அலுவலகத்திடம் (ஏஜி) தாக்கல் செய்வோம் என்று குலா செய்தியாளர்களிடம் கூறினார்.

அமைச்சர் அவரது வருகையின் போது வங்காள தேசத்திலிருந்து வந்துள்ள இரண்டு வெளிநாட்டுத் தொழிலாளர்களிடம் அவர்களின் வேலைச் சூழ்நிலை பற்றி கேட்டார். தாங்கள் திருப்தி அடைந்துள்ளதாக அவர்கள் பதில் அளித்தனர்.