மலேசிய வழக்குரைஞர் மன்றம் இன்று ஏற்பாடு செய்துள்ள சட்டவிரோத ‘உரிமைக்கான ஊர்வல’த்தில் கலந்துகொள்வோர்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோலாலம்பூர் போலீஸ் தலைவர் முகம்மட் சாலே எச்சரித்துள்ளார்.
அதற்கு போலீஸ் சட்டத்தின்கீழ் அனுமதி பெற வேண்டும். வழக்குரைஞர் மன்றம் அனுமதிக்கு விண்ணப்பம் செய்யவில்லை என்று சாலே தெரிவித்ததாக சீன நாளேடான சின் சியு டெய்லி கூறியுள்ளது.
அது சட்டவிரோதமானது என்பதால் வழக்குரைஞர்கள் அதைப் புறக்கணிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
“அதையும் மீறி ஊர்வலத்தில் பங்குபெற்றால் அவர்கள் தெரிந்தே சட்டத்தை மீறுகிறார்கள் என்று பொருள்படும்”, என்றவர் கூறியதாக அந்நாளேடு குறிப்பிட்டுள்ளது.
ஊர்வலத்தைத் தடுத்து நிறுத்த போலீசார் தக்க நடவடிக்கை எடுப்பர் என்றாரவர்.
இதனிடையே, அமைதிப் பேரணிக்கு எதிர்ப்புதற்காக வழக்குரைஞர்கள் கோலாலம்பூரின் பூமலையில் திரளத் தொடங்கியுள்ளனர். இதுவரை சுமார் 200 வழக்குரைஞர்கள் அங்கு திரண்டுள்ளனர். அங்கிருந்து அவர்கள் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாடாளுமன்றத்துக்கு ஊர்வலமாக நடந்துசென்று அமைதிப்பேரணி மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் மகஜர் ஒன்றைச் சமர்பிக்க திட்டமிட்டுள்ளனர்.