2011ம் ஆண்டுக்கான அமைதியான பொதுக் கூட்ட மசோதாவுக்கான திருத்தங்களை இன்று பிற்பகல் சமர்பிக்கும். அந்த மசோதா மீது குழு நிலையில் விவாதங்கள் நிகழும் போது அவை தாக்கல் செய்யப்படும்.
அந்த மசோதாவில் திருத்தங்கள் செய்யப்படும் என சட்டத்துறைக்குப் பொறுப்பான அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் கடந்த சனிக்கிழமை அறிவித்திருந்தார்.
அந்தத் திருத்தங்கள் பற்றிய விவரங்கள் இன்று காலை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டன. மசோதாவில் நான்கு பிரிவுகளில் குறிப்பிட்ட ஆறு திருத்தங்கள் அதில் காணப்படுகின்றன. அறிவிப்பு, முறையீடு, பதில் ஆகியவற்றுக்கான காலம் குறைக்கப்பட்டுள்ளது.
– 30 நாட்கள் முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என்பது 10 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது
– போலீசார் சம்பந்தப்பட்டவர்களுக்கு 24 மணி நேரத்துக்குள் பதில் கொடுக்க வேண்டும். ஏற்கனவே அது 48 மணி நேரமாக இருந்தது.
– உத்தேசப் பொதுக் கூட்டம் மீது சம்பந்தப்பட்டவர்கள் 48 மணி நேரத்துக்குள் புகார் செய்யலாம். அது முன்பு ஐந்து நாட்களாக இருந்தது.
– போலீஸ் ஏற்பாட்டாளருக்கு ஐந்து நாட்களுக்குள் பதில் சொல்ல வேண்டும். அது முன்பு 12 நாட்களாக இருந்தது.
– நிராகரிக்கப்பட்டதற்கு அல்லது போலீசார் ஆணைகளுக்கு எதிராக முறையீடுகள் பதில் கிடைத்த 48 மணி நேரத்துக்குள் செய்யப்படலாம். ஏற்கனவே அது நான்கு நாட்களாக இருந்தது.
– உள்துறை அமைச்சர் எந்த முறையீட்டுக்கும் 48 மணி நேரத்துக்குள் பதில் கொடுக்க வேண்டும். அது முன்பு ஆறு நாட்களாக குறிக்கப்பட்டிருந்தது.
அந்த மசோதாவில் முன்மொழியப்பட்டிருந்த விதிமுறைகள், கட்டுப்பாடுகள் மீது பரவலாக எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அரசாங்கம் அதற்கான திருத்தங்களை அறிமுகம் செய்துள்ளது.
சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்துடன் ஆலோசனை நடத்திய பின்னர் கடந்த வெள்ளிக் கிழமை நிகழ்ந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அந்தத் திருத்தங்கள் முடிவு செய்யப்பட்டன.