பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் காலப்போக்கில் அக்கட்சியின் துணைத் தலைவர் அஸ்மின் அலியால் ஒழித்துக் கட்டப்படுவாராம். அப்படி ஆருடம் கூறியுள்ளார் செல்வாக்குமிக்க சமயப் போதகர் வான் ஜி வான் உசேன்.
சீன இராணுவ தத்துவஞானி சன் ட்ஸு கூறுவதுபோல் அஸ்மின் தன் எதிரியின் ஆயுதத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதில் கில்லாடி என்றாரவர்.
2014-இல் “காஜாங் திட்டம்” போட்டவர்கள் அதனால் பேரைக் கெடுத்துக்கொண்டதுதான் மிச்சம், ஆனால், அதில் பெரிதும் பயனடைந்தவர் அஸ்மின்தான்.
அஸ்மின் தன்னை அன்வாரின் விசுவாசி என்று காட்டிக்கொள்ளத் தவறுவதில்லை. அதேபோல் வாய்ப்புக் கிடைக்கும்போது அவரை மட்டம் தட்டவும் தயங்குவதில்லை.
“அமைச்சர் என்பதால் தன்னால் அன்வாரைவிட அதிகம் செய்ய முடியும் என்பதை அவ்வப்போது காண்பித்துக்கொள்ள முயல்கிறார் அஸ்மின்”.
மேலும், அன்வார் அல்லது தன் முதல் எதிரி ரபிசி ரம்லி போல் அல்லாமல் எப்போது பேச வேண்டும் எப்போது வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும் என்பதையும் தெரிந்து வைத்திருக்கிறார்.
“கட்சித் துணைத் தலைவர் தேர்தலில் வெற்றிபெற்றதும் அவர் ஆற்றிய உரை ரபிசியைக் குத்திக்காட்டுவதுபோல் இருந்தது.
“ஆனால், அது அன்வாரைக் குறி வைத்துப் பேசிய பேச்சு. இப்ராகிம் என்ற பெயரைக் குறிப்பிட்ட போதெல்லாம் அவர் (அஸ்மின்) குரல் மாறியது.
“அவரின் முன்னாள் எதிரிகள் எல்லாருமே ‘பின் இப்ராகிம்’ என்னும் பெயருள்ளவர்களே- காலிட் இப்ராகிம், சைட் இப்ராகிம். எனவே அடுத்து விழப் போகிறவர் ‘அன்வார் இப்ராகிம்’”, என்று வான் ஜி குறிப்பிட்டார்.
அண்மையில் கட்சி மேலிடத்துக்கு அன்வார் ஆள்களை நியமனம் செய்தபோது அந்த நியமனத்துக்கு அஸ்மின் எதிர்ப்புத் தெரிவித்தது சீடன் குருவை எதிர்க்கத் துணிந்து விட்டார் என்பதற்கான அறிகுறியாகும் என்றாரவர்.