பெட்ரோல் விற்பனையாளர்கள் ஆதாயம் பெறுவதற்காக வாராவாரம் பெட்ரோல் விலையை மிதக்கவிடும் முறை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டதில் டிஏபி டோனி புவாவுக்கும் பங்கிருக்கலாம் என்று முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறினார்.
“அரசாங்கம் நேற்று, பெட்ரோல் விற்பனையாளர்களின் இலாப வரம்பு உயர்வுக்கு வழி செய்ததை புவா நிச்சயம் அறிந்திருப்பார்- பிஎன்கூட அப்படிச் செய்ததில்லை.
“அம்முடிவு எடுக்கப்பட்டதில் புவாவின் பங்களிப்பும் இருக்கக்கூடும். யாரைக் காப்பதற்காக இந்நடவடிக்கை- எண்ணெய் நிறுவனங்களையா, மக்களையா?”, என்றவர் இன்று ஓர் அறிக்கையில் வினவினார்.
புவா, நிதி அமைச்சர் லிம் குவான் எங்கின் சிறப்பு அதிகாரியாவார்.
புவா கடந்த காலங்களில் பெட்ரோல் விற்பனையாளர்களிடையே போட்டியை ஊக்குவிக்க வேண்டும் என்று வாதாடியதுடன் அப்போதைய அரசாங்கம் பயனீட்டாளர்களைவிட விற்பனையாளரின் நலன்களுக்கே முக்கியத்துவம் அளிப்பதாகவும் குற்றஞ்சாட்டியவர் என்பதை நஜிப் சுட்டிக்காட்டினார்.
முன்பு பிஎன் அரசாங்கம் இதேபோன்ற முடிவை எடுத்தபோது டிஏபி அதைச் சாடியது, அரசாங்கத்தை வெறுக்குமாறு மக்களைத் தூண்டியும் விட்டது.
“இப்போது அவர்களும் பிஎன் செய்ததைத்தான் செய்கிறார்கள்”, என்று நஜிப் சாடினார்.
நேற்று லிம், உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சி கண்டு வருவதால் வாராந்திர விலை மிதக்கவிடும் முறை மீண்டும் கொண்டுவரப்படுவதாக அறிவித்தார்.
விலைகளை வாராந்தோறும் மிதக்கவிடுவது ஏற்கனவே பிஎன் அரசாங்கம் கடைப்பிடித்து வந்த ஒரு முறைதான்.
ஆனால், இப்போதைய வாராந்திர விலை மிதக்கப்படும் முறை முன்னைய முறையைப் போன்றல்ல என்று லிம் கூறினார். இந்த முறை கச்சா எண்ணெய் விலை உயரும்போது இரத்துச் செய்யப்படும், அதே வேளை ஒரு லிட்டருக்கு ரிம2.20 என்று பெட்ரொல் விலைக்கு உச்சவரம்பும் கொண்டுவரப்படும்.