முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் ஏனைய அரசியல்வாதிகள்போல் அவர்மீதான வழக்கு விசாரிக்கப்படுவதைத் தாமதப்படுத்தும் வேலைகளைச் செய்து வருவதாக மூத்த செய்தியாளர் ஏ.காடிர் ஜாசின் குற்றஞ்சாட்டினார்.
குதப்புணர்ச்சி அல்லது கொலை வழக்குகளைவிட நஜிப்மீதான சில வழக்குகளைக் குறிப்பாக பண மோசடி வழக்குகளை நிரூபிப்பது எளிது என்றாரவர்.
“எதிர்பார்க்கப்பட்டதைப் போலவே நஜிப்பின் வழக்குரைஞர் குழு, வழக்கு விசாரணைக்கு வருவதைத் தாமதப்படுத்தும் வேலைகளைச் செய்யத் தொடங்கிவிட்டது. அரசியல்வாதிகள் நீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்படும்போது என்னவெல்லாம் செய்வார்களோ அதே உத்திகளை அவர்களும் பயன்படுத்துகிறார்கள்.
“முதலில் நஜிப் குற்றவாளிக் கூண்டில் ஏற மறுத்தார். பிறகு அவரின் வழக்குரைஞர்கள் அரசுத்தரப்பில் உள்ள சில அதிகாரிகளை நீக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.
“நஜிப் ஒரே ஒரு தந்திரத்தை மட்டும் இன்னும் கடைப்பிடிக்கவில்லை. உடல்நலக் குறைவு என்றுகூறிகொண்டு மருத்துமனையில்போய் படுத்துக்கொள்ளவில்லை”, என்றாரவர்.
இதையெல்லாம் பார்க்கும்போது நஜிப்பும் அவரின் கூட்டாளிகளும் விரைவில் சிறைக்கு அனுப்பப்படுவது சாத்தியமில்லை என்று காடிர் கூறினார்.