கோலாலம்பூரில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் நாள்

இதுவரை காலமும் இலங்கையில் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொது மக்களையும் தமிழீழ விடுதலைக்காக இறுதிவரை போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களையும் நினைவுகொள்ளும் தேசிய நினைவெழுச்சிநாள், செம்பருத்தி மற்றும் உலகத் தமிழர் நிவாரண நிதியத்தின் ஏற்பாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (27.11.2011) அன்று இரவு 7 மணிக்கு கோலாலம்பூரில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சுமார் 200க்கும் மேற்பட்ட தமிழ் உணர்வாளர்கள் கலந்துகொண்டனர்.

அகவணக்கத்துடன் ஆரம்பமான தேசிய நினைவெழுச்சிநாள் நிகழ்வில் பொதுச் சுடரினை மலேசிய சுவாராம் மனித உரிமைக் கழகத்தின் தலைவர் வழக்கறிஞர் கா.ஆறுமுகம் ஏற்றிவைக்க ஈகைச்சுடரினை உலகத் தமிழர் நிவாரண நிதியத்தின் அறங்காவலர் வழக்கறிஞர் சி.பசுபதி அவர்கள் ஏற்றிவைத்தார்.

இதனையடுத்து நிகழ்வுக்கு வருகை தந்த உணர்வாளர்கள், மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த மாவீரர் நினைவுச் சின்னத்தில் தமது தியாக செல்வங்களுக்கு மலர்தூவி சுடர்வணக்கம் செலுத்தினர்.
அதன்பின்னர் வழக்கறிஞர் பசுபதி மற்றும் கா.ஆறுமுகம் அவர்களின் உரைகள் இடம்பெற்றது.

இறுதியாக “தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்” என்ற தமிழர்களின் தாரக மந்திரத்தை அனைத்து மக்களும் இணைந்து உரத்துக்கூறி “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” பாடலுடன் நிகழ்வினை நிறைவேற்றினர்.