தமிழ் நேசன் – சமூகத்தின் ஓர் ஒளிவிளக்காகவும் திகழ்ந்தது!

தமிழ் நேசனின் திடீர் நிறுத்தம், ஒரு தாங்க இயலாத வேதனையை அளித்துள்ளது. அதற்கு காரணம் அது ஆரம்ப காலம் முதல் வகுத்த வரலாராகும்.

1924ஆம் ஆண்டு செம்டம்பர் 24ஆம் தேதி கால் பதித்த தமிழ்நேசன் கடந்த சனவரி 31 ஆம் தேதியோடு அது தனது பிரசுரத்தை நிறுத்திக்கொண்டது.

தனது பாதையில் இந்நாட்டு இந்தியர்களின் ஒரு உரிமைக் குரலாகவும் இந்தியர்களின் தேசியத்தன்மையை கொண்டு வளர்க்கப்பட்ட அரசியலுக்கு  ஓர் ஆணிவேராகவும் இருந்துள்ளது. காலனித்துவத்தை எதிர்த்தவர்கள் இந்திய தேசிய வாதிகள். அவர்களின் சித்தாந்ததை தமிழ் பேசும் சாதரண தொழிலாளார்களுக்கு கொண்டு சென்று விடுதலை உணர்வை விதைத்த பெருமை தமிழ் நேசனையும் சாரும்.

அப்போது பிரசுரம் வழி விழிப்புணர்வை தூண்ட தமிழ்ப்பத்திரிக்கைகள் பெரும்பங்காட்டின. அதன் பின்னணியில் அரசியல் சித்தாந்தமும் இருந்தது. காலனித்துவ ஆட்சியை எதிர்க்கும் வகையில் தியாக சிந்தனையுடன் பணியாற்ற பெருமையில் தமிழ் நேசனுக்கும் பங்குண்டு.

1924-இல் நரசிம்ம ஐயங்காரால் தொடங்கப்பட்ட இப்பத்திரிகை தொடக்கத்தில் வார இதழாகச் செயல்பட்டது. நரசிம்ம ஐயங்காரின் மறைவுக்குப் பிறகு சிறிது காலம் சீனரிடம் கைமாறி, பின்னர்  1947முதல் மலையாண்டி செட்டியாரின் கைவசம் வந்த தமிழ் நேசனுக்கு இந்நாட்டின் மொழி, இன வளர்ச்சியில் நீண்ட வரலாற்றுப் பங்குண்டு என்கிறார் மலேசிய பத்திரிக்கைகள் பற்றி ஆய்வு கட்டுரை படைத்துள்ள வல்லினத்தின் ஆசிரியர் ம. நவீன்.

அந்த காலகட்டத்தில் பத்திரிக்கைகள் வணிக அடிப்படையில் முழுமையாக இயங்கவில்லை, அதற்கான உந்துதல் தேச சிந்தனையும் இந்திய விடுதலை போரட்டமும் ஆகும். அவ்வகையில் பவணி வந்த பத்திரிக்கைகளில் தமிழ்கொடி, ஜனநாயகம், தமிழ் முரசு ஆகியவையும் அடங்கும்.

1946-இல் மலேயன் யூனியன் உருவாக்கப்பட்டது, அதே காலத்தில்தான் மாஇகா-வும் உருவானது. இந்த காலக்கட்டத்தில் தமிழர்களின் நிலைகுறித்து முற்போக்கு சிந்தனை கொண்டவகையில் தமிழ்நேசனும் பங்கு கொண்டது. குறிப்பாக தமிழர்களுக்கான குடியுரிமை தற்காக்க பட வேண்டும் என்ற சிந்தனை தூண்டப்பட்டது.

தமிழ்மொழிக்காகவும் தமிழ்ப்பள்ளிகளுக்காகவும் தமிழ் நேசன் எல்லா கால கட்டத்திலும் போராடியுள்ளது. உதாரணமாக 1975ஆம் ஆண்டில், தமிழ்ப் பள்ளியை மூடவேண்டும் என்ற மேல் தட்டு மக்களின் வேண்டுகோளை எதிர்த்து தமிழ் பத்திரிகைகள் போராடின. தமிழ் நேசன் தமிழ் பள்ளிகளைக் காப்பாற்றும் போராட்டத்திற்காக நிதி திரட்டும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

சமூகத்திற்கு ஆக்கரமான பணிகளை தமிழ் நேசன் செய்துள்ளது. எழுத்துலகில் புதிய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியது. அதோடு  சுப.நாராயணன், பைரோஜி நாராயணன் மூலமாக 1950களில் கதை வகுப்பு ஆறு மாதங்கள் நடத்தியதும், 1952-இல் பொறுப்பாசிரியராகப் பதவியேற்ற பிரபல எழுத்தாளர் கு.அழகிரிசாமி முன்னெடுத்த இலக்கிய முயற்சிகளும் அடங்கும்.

1972-இல் முருகு சுப்ரமணியம் ஆசிரியராகப் பொறுப்பேற்று தமிழ் நேசனில் நடத்திய ‘பவுன் பரிசு திட்டம்’ எனத் தொடர்ந்து மலேசிய எழுத்தாளர்களுக்கு உந்துதல் கொடுத்ததன் வழி மலேசியாவில் தமிழ் இலக்கியம் செழித்திருப்பதற்கான முக்கியமான பணிகளை ‘தமிழ் நேசன்’ செய்துள்ளது என்றால் அது மிகையில்லை என்கிறார் நவீன்.

1980-ஆம் ஆண்டுகளில் மஇகா தேசியத் தலைவராக இருந்த சாமிவேலு இந்த பத்திரிக்கையை வாங்கினார். அன்று முதல் இந்நாள் (31.1.2019) வரை அது ஆளும் கட்சியாக இருந்த தேசிய முன்னணிக்கும் மஇகா- விற்கும் ஆதரவாக செயல்பட்டது. ஓரளவு விமர்சன கண்ணோட்டம் இருப்பினும், அதன் சார்பு நிலையானது சமூகத்தின் அவலங்கள் அரசாங்கத்தின் பொறுப்புணர்வுக்கு உட்பட்டது என்பதை வெளிகாட்டவில்லை. மாறக, அது ஒதுக்கப்படும் இந்தியர்களைகளின் நிலையை நியாயப்படுத்தும் அரசாங்கத்தின் ஒரு கொள்கை பரப்பும் சாதனமாகவே செயல்பட்டது.

மீண்டும் தமிழ் நேசன் பிரசுரம் ஆகாதா? என்று ஆசையும் அவாவும் எழாமல் இருக்காது, ஆனால் அந்த உணர்வுகள் தமிழ் நேசன் அதன் முதல் 60 ஆண்டுகளில் மக்கள் மனதில் உருவாக்கிய ஆழ்ந்த அரசியல், சமூகம், மொழி சார்ந்த போரட்ட படைப்புகளின்  பிரதிபலிப்பாகவே இருக்கும்.

தமிழ் நேசன் இந்திய சமூகத்தின் ஓர் ஒளிவிளக்காகவும் திகழ்ந்தது என்பது வரலாராகும்.

– மலேசியா இன்று