செமிஞ்யே இடைத் தேர்தல்: பிஎன் மற்றும் ஹரப்பான் ஆதரவாளர்களுக்கிடையில் சிறு சலசலப்பு

செமிஞ்யே இடைத் தேர்தலில் வாக்களிப்பு சுறுசுறுப்பாக நடந்து வரும் வேளையில், செசாப்பான் பத்து ரெம்பாவ் வாக்களிப்பு மையத்தில் பிஎன் மற்றும் பக்கத்தான் ஹரப்பான் ஆதரவாளர்களுக்கிடையில் வாக்குவாதம் முற்றி ஒரு பதற்ற நிலை நிலவியது. பதற்றத்துக்குக் காரணம் அங்கிருந்த ஒரு பதாதை.

முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மன்சூரின் படத்தைக் கொண்டிருந்த அப்பதாதையில் “Siapa boss? Aku lah boss (யார் போஸ்? நானே போஸ்)” என்றும் எழுதப்பட்டிருந்தது.

தேர்தல் அதிகாரிகள் அதை அகற்ற முனைந்தபோது ஹரப்பான் ஆதரவாளர்கள் தடுத்தனர்.

இன்னொரு சம்பவம். இது வாக்களிப்பு மையமாக செயல்பட்டுவரும் ஜாலான் பாங்கி பத்து தீகா தொடக்கநிலை சமயப் பள்ளியில் நிகழ்ந்தது. அங்கு பக்கத்தான் ஹரப்பான் சின்னத்தைக் கொண்ட வாகனங்கள் வாக்களிப்பு மையத்துக்கு மிக அருகில்(50 மீட்டர்வரை வந்தனவாம்.

ஹரப்பான் சின்னத்தைக் கொண்ட பெரோடுவா அல்சா கார் ஒன்று ஒரு வாக்காளரை இறக்கிவிடுவதற்காக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிக்குள் நுழைந்தது என ஹுலு லங்காட் மஇகா இளைஞர் தலைவர் எஸ்.ஆர்.சந்திரதேவன் கூறினார்.

தேர்தல் ஆணையம் அதன் கடமையை முறையாக செய்யவில்லை என்றவர் குற்றஞ்சாட்டினார். “இதுதான் நடுநிலையா?”, என்றவர் வினவினார்.

இன்னொரு வாகனமும் “Pergi Mengundi” பாடல் முழங்க வாக்களிப்பு மையத்துக்கு மிக அருகில் ஓட்டிச் செல்லப்பட்டதாம்.

“வாகனங்கள் எப்படி அப்பகுதிக்குள் செல்லலாம்?”, என்று சந்திரதேவன் கேள்வி எழுப்பினார்.

இதன் தொடர்பில் இசி அதிகாரி ஒருவரை அணுகி விசாரித்ததற்குக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வாகனங்களை அனுமதிக்க வேண்டாம் என்று அவரின் பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

அத்துடன் அவர், கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் பிஎன் ஒரு வீட்டை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு அதை ஓய்வெடுக்கும் இடமாகப் பயன்படுத்திக் கொண்டிருப்பது குறித்தும் அதிருப்தி தெரிவித்தார்.