‘ராக்கைனில் 9 பொலிஸார் கொல்லப்பட்டனர்’

மியான்மாரின் மேற்கு ராக்கைன் மாநிலத்தில், ஆயுததாரிகளின் தாக்குதலொன்றில், பொலிஸார் ஒன்பது பேர் கொல்லப்பட்டதாக பொலிஸார், நேற்று (10) தெரிவித்துள்ளனர்.

குறித்த தாக்குதலானது, ராக்கைன் மாநிலத்தின் தலைநகரான சிட்வேயிலிருந்து வடக்காக ஒரு மணித்தியாலம் பயணிக்கையில் வரக்கூடிய யொடயோக்ற் கிராமத்தில், நேற்று முன்தினம் பின்னிரவிலேயே இடம்பெற்றுள்ளது.

பொலிஸார் ஒன்பது பேர் கொல்லப்பட்டதாகவும், ஒருவர் காயமடைந்ததாகவும், இன்னொருவரைக் காணவில்லை எனவும் தனது பெயரைக் குறிப்பிடவிரும்பாத சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கசிந்த பொலிஸ் அறிக்கையொன்றில், பொலிஸ் நிலையத்திலிருந்து ஆயுதங்களும் எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், குறித்த தாக்குதலுக்கு எந்தவொரு குழுவும் இதுவரையில் உரிமை கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ராக்கைனில், 2017ஆம் ஆண்டு இராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையொன்றைத் தொடர்ந்து, 740,000 ரோகிஞ்சா முஸ்லிம்கள் எல்லையைக் கடந்து பங்களாதேஷ் சென்றிருந்தனர். இதில், இராணுவ உயரதிகாரிகளுக்கெதிராக இனவழிப்பு, மனிதத்துக்கெதிரான குற்றச்சாட்டுகள் காணப்படுவதாக ஐக்கிய நாடுகளின் விசாரணையாளர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், ராக்னையின் பெளத்தர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகத் தெரிவிக்கும் அரக்கன் இராணுவத்துக்கெதிராகவே தற்போது ஆயுதப் படைகள் போரிலீடுபட்டு வருகின்றன. ரோகிஞ்சா முஸ்லிம்களை வெளியேற்றுவதற்கு படைவீரர்களுக்கு உதவினர் என குறித்த பெளத்தர்களே குற்றஞ்சாட்டப்பட்டிருந்தனர்.

அந்தவகையில், மேலும் சுயாட்சிக்காகவும் ராக்கைன் மக்களின் உரிமைகளுக்காகவும் அண்மைய மாதங்களில், பாதுகாப்புப் படைகள், அதிகாரிகள் மீது அரக்கன் இராணுவம் சில தாக்குதல்களை நடத்தியிருந்தது. இந்நிலையில், அரக்கன் இராணுவத்தை உடனடியாகத் தொடர்பு கொள்ள முடிந்திருக்கவில்லை.

விசாரணை இடம்பெறுவதாக உள்ளூர் நிர்வாகியொருவர் உறுதிப்படுத்தியுள்ளபோதும் அரக்கன் இராணுவத்துக்கு ராக்கைனில் பரவலாக ஆதரவு காணப்படுகிறது. அரக்கன் இராணுவத்துடன் தொடர்புடையதாக கைதுசெய்யப்பட்ட தமது நான்கு சக உள்ளூர் நிர்வாகிகளை விடுதலை செய்யுமாறு, 100 உள்ளூர் நிர்வாகிகள், தமது இராஜினாமாவை கடந்த மாதம் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

-tamilmirror.lk