கிரிஷ்ச்சேர்ஜ் பள்ளிவாசல் துப்பாக்கி சூட்டு சம்பவத்தை சாடினார் ஜேவியர் ஜெயக்குமார்!

நியூசிலாந்து கிரிஷ்ச்சேர்ஜ் பள்ளிவாசல் துப்பாக்கி சூட்டு சம்பவத்துக்குக் காரணமானவர்கள் விரைவில் சட்டத்திற்கு முன் கொண்டு வரப் பட்டு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவரும், கோலலங்காட் நாடாளுமன்ற உறுப்பினரும், நீர், நிலம் இயற்கை வள அமைச்சருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார். 

இச் சம்பவத்தில்  உயர்  இழந்தவர்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டும் அதே வேளையில் இந்தச் சம்பவத்தில் காயமடைந்த அனைவரும் சிகிச்சைகளின்  வழி உடல் நலம்பெற்று விரைவில் வீடு திரும்பவும் நாம் இறைவனிடம் பிரார்த்திக்கிறோம் என கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவரும், கோலலங்காட் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார் தெரிவித்தார். 

இச்சம்பவத்தில் காயமடைந்த மற்றும் உயிர் இழந்தவர்களின் குடும்பங்களும், அவர்களின்  அன்பிற்கு  உரியவர்களின் துயரத்தில், நாமும் பங்கு கொள்ளும் வேளையில், அவர்கள் மன ஆறுதல் பெற்று ஆறா துயரிலிருந்து மீண்டெழும் சக்தியை அனைவருக்கும் ஆண்டவன் அருளட்டும் என்றார் அவர். 

அது வரை 49 உயிர்களைக் கொள்ளைகொண்ட இச்சம்பவத்தை, “மனித நேயம்மிக்க உலக மக்கள் அனைவரும்  இனச் சமய, எல்லையற்ற ரீதியில் கண்டிப்பார்கள் என்பது உறுதி,  இந்த மிருகத்தனமான செயல்கள்  உலகில் எந்தப் பகுதியில் நடந்தாலும் மனிதநேயத்தின் மீது பற்று கொண்டுள்ள எல்லா மக்களும் துடித்தொழுவார்கள்” என்றார்  சேவியர் ஜெயக்குமார்.  

நியூசிலாந்து சட்ட  அமலாக்கத் துறை இந்தச் சம்பவத்துக்குக் காரணமானவர்களை  விரைவில்  சட்டத்தின் முன் கொண்டு வர வேண்டும், அந்தக் கொடியவர்கள் தங்கள் செயலுக்கான தகுந்த தண்டனையைப் பெறுவதை அந்நாட்டுச் சட்டத்துறை உறுதி செய்யவேண்டும் என்றார் சேவியர் ஜெயக்குமார்.