பாகிஸ்தானில் கார் பூட்டும் தொழிற்சாலையைத் திறக்கிறது புரோட்டோன்

தேசிய கார் தயாரிப்பு நிறுவனம் புரோட்டோன் பாகிஸ்தானில் அந்நாட்டு நிறுவனம் ஒன்றுடன் சேர்ந்து கார்-பூட்டும் தொழிற்சாலை ஒன்றை நிறுவும். அதுவே தென் ஆசியாவில் அதன் முதலாவது தொழிற்சாலையாக அமையும்.

அதற்கான ஒப்பந்தத்தை புரோட்டோனும் பாகிஸ்தான் நிறுவனமொன்றும் செய்து கொண்டிருப்பதாக பாகிஸ்தானுக்கான மலேசிய தூதர் இக்ராம் முகம்மட் இப்ராகிம் கூறினார்.

“புரோட்டோன், பாகிஸ்தானில் கார் விற்பதற்கான வாய்ப்பு நிறைய இருப்பதாகக் கருதுகிறது. அதனால்தான் அல்ஹாஜ் ஆட்டோமோடிவ் நிறுவனத்துடன் கூட்டுச் சேர்ந்து கார்-பூட்டும் ஆலை ஒன்று அமைக்கிறது.

“அதுவே தென் ஆசியாவில் புரோட்டோனின் முதலாவது கார்-பூட்டும் தொழிற்சாலையாக விளங்கும். பாகிஸ்தானின் மக்கள்தொகை 210 மில்லியன் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்”, என இக்ராம் இஸ்லாமாத்தில் கூறினார்.

நாளை அந்த ஆலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் மற்றும் அவரது பாகிஸ்தானிய சகா இம்ரான் முன்னிலையில் நடைபெறும்.

மகாதிர் பாகிஸ்தானுக்கான அவரது மூன்று நாள் வருகையை இன்று தொடங்குகிறார்.