நஜிப் விசாரணை நேரடி ஒளிபரப்பு இல்லை

புதன்கிழமை தொடக்கம், கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நடைபெறவிருக்கும், நஜிப் ரசாக் மீதான எஸ்.ஆர்.சி. இண்டர்நேசனல் சென். பெர். நிதி தொடர்பான குற்றச்சாட்டு வழக்கு விசாரணையை, நேரடியாக ஒளிபரப்ப முடியாது.

நீதிமன்றத்தின் விசாரணை, எந்த ஊடகத்திலும் நேரடியாகவோ அல்லது பதிவு செய்யப்பட்டோ ஒளிபரப்ப முடியாது என்று, மத்திய நீதிமன்ற அலுவலகத்தின் தலைமை பதிவாளர் வெளியிட்ட அறிக்கையை அடுத்து இம்முடிவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நஜிப் வழக்கு விசாரணையைத் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று, ஓர் ஆன்லைன் மனு மலேசியர்களால் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நேற்று, வழக்கு விசாரணை நேரடி ஒளிபரப்பாவதைத் தான் ஆதரிப்பதாகவும், வழக்கின் உண்மையை அறிந்துகொள்ளும் உரிமை மக்களுக்கு உண்டு என்றும் தனது முகநூல் பக்கத்தில் நஜிப் கூறியிருந்தார்.

-பெர்னாமா