ஆதாரம் : ஒஸ்மான் இடத்திற்குப் பிரதான வேட்பாளராக, புக்கிட் கெப்போங் சட்டமன்ற உறுப்பினர்

ஜொகூர் மந்திரி பெசார், ஒஸ்மான் சப்பியான் தனது பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, பெர்சத்துவைச் சேர்ந்த புக்கிட் கெப்போங் சட்டமன்ற உறுப்பினர் ஷாருட்டின் ஜமால், அப்பதவியை நிரப்பலாம் எனக் கூறப்படுகிறது.

இன்று புத்ராஜெயாவில், மலேசியா மற்றும் சிங்கப்பூர் மூத்த அதிகாரிகளுடன் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், ஜொகூர் அரசாங்கத்தைப் பிரதிநிதித்து ஷாருட்டின் கலந்துகொண்டதை அடுத்து, இந்த வதந்தி இன்னும் வலுப்பெற்றது.

ஜொகூர் மாநில ஆட்சிக்குழுவில், உடல்நலம், சுற்றுச்சூழல் மற்றும் வேளாண் துறைக்குப் பொறுப்பேற்றிருக்கும் ஷாருட்டின் 44 வயதானவர். அவர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு பெற்றது இதுவே முதன்முறையாகும்.

ஷாருட்டின் முகநூலில், அவர் ஹசானுட்டின் பல்கலைக்கழத்தில், மருத்துவத்துறையில் பயின்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஷாருட்டினின் நியமனத்தை, ஜொகூர் பெர்சத்து மற்றும் அரண்மனை ஏற்றுக்கொள்ளும் என மலேசியாகினியிடம் தெரிவிக்கப்பட்டது.

புக்கிட செரின் அரண்மனைக்கு மிகவும் நெருக்கமான ஆதாரம் ஒன்று, ஷாருட்டின், முகமட் குஸான் அபு பாக்கார் மற்றும் அமிநோல்ஹுடா ஹஸ்சான் ஆகியோரின் பெயர்கள் மந்திரி பெசார் பதவிக்கு முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவித்தது.

குஸான் (பிகேஆர்) மற்றும் அமிநோல்ஹுடா (அமானா) இருவரும் ஜொகூர் ஆட்சிக்குழுவில் தற்போது உள்ளனர். இறுதி முடிவு மாநில சுல்தானின் கைகளில் உள்ளது என்றும் அந்த ஆதாரம் தெரிவித்தது.

கெம்பாஸ் சட்டமன்ற உறுப்பினருமான ஒஸ்மான், மந்திரி பெசார் பதவியில் இருந்து விலகுவதாக, இன்று மாலை, நாடாளுமன்றத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, பிரதமர் அறிவித்தார்.

இதற்கிடையே, அம்மூவர் மட்டுமின்றி, பெர்சத்துவைச் சேர்ந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் – சோலிஹான் பட்ரி (தெனாங்), முகமட் இஜார் அஹ்மாட் (லார்கின்) மற்றும் மஸ்லான் பூஜாங் (புத்ரி வங்சா) – பெயரும் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது என்று பெர்சத்து வட்டாரம் தெரிவித்துள்ளது.