கோலாலும்பூர் உயர் நீதிமன்றம், வழக்குரைஞர் முகம்மட் ஷாபிக்கும் மற்றும் இருவருக்கும் எதிராக நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக வழக்கு தொடுக்க காலஞ்சென்ற தனியார் துப்பறிவாளர் பி.பாலசுப்ரமணியத்தின் மனைவி ஏ.செந்தமிழ்ச் செல்விக்கு அனுமதி வழங்கியது.
அந்த மற்றும் இருவர் பாலிங் எம்பி அப்துல் அசீஸ் அப்துல் ரகிமும் ஒரு மருத்துவ அதிகாரியான டாக்டர் எஸ்.கனேசநாதனும் ஆவர்.
“அம்முவருக்கும் எதிராக நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்கு எதிராக வழக்கு தொடுப்போம்”, என்று செந்தமிழ்ச் செல்வியின் வழக்குரைஞர் அமெரிக் சென் பிரி மலேசியா டுடே-இடம் கூறினார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 31-இல், செந்தமிழ்ச் செல்வி தாக்கல் செய்த மனுவில், அம்மூவரும் வர்த்தகர் தீபக் ஜெய்கிஷன் ஒரு வழக்கில் சாட்சியமளிப்பதைத் தடுத்து விட்டதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.
தீபக்கின் வழக்குரைஞரான ஷாபி, தன் கட்சிக்காரர் நோயின் காரணமாக சாட்சியமளிக்க வர முடியாது என்று நீதிமன்றத்தில் பொய்யுரைத்தார் என்று செந்தமிழ்ச் செல்வி கூறினார்.
அரசாங்க மருத்துவமனை ஒன்றில் பணிபுரியும் கணேசநாதன் கொடுத்திருந்த மருத்துவச் சான்றிதழால் வழக்கு மார்ச் 27க்கும் பின்னர் ஏப்ரல் 17க்கும் தள்ளிவைக்கப்பட்டது.
தீபக்கே, அவ்விருவரும் பொய்யான மருத்துவ ஆவணத்தை வைத்து நீதிமன்றத்துக்கு வரமுடியாமல் தன்னைத் தடுத்து விட்டதாக போலீசில் புகார் செய்துள்ளார் என்றும் செந்தமிழ்ச் செல்வி கூறிக் கொண்டார்.
தான் தொடுத்துள்ள வழக்கில் ஒன்றில் முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கு எதிராக தீபக் சாட்சியமளிப்பதைத் தவிர்க்கவே இவ்வளவும் செய்யப்பட்டது என்று செந்தமிழ்ச் செல்வி மேலும் கூறினார்.