பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமதுவுடன் அதிகாரத்தை மாற்றுவதற்கான பேச்சுவார்த்தைகள் சுமூகமான முறையில் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.
இருப்பினும் அதிகார மாற்றத்தின் காலத்தையோ தேதியையோ அவர் குறிப்பிடவில்லை.
பிரதமர் நியமனம் குறித்த தேதி மற்றும் அதிகாரத்தை மாற்றுவது பற்றிய கலந்துரையாடல் நல்முறையில் நடைபெறுகிறது என்றார்.
“டாக்டர் மகாதிர் தொடர்ந்து என்னுடன் இது தொடர்பாக இது போலவே பேசட்டும்,” என்று அவர் இன்று பாங்கி, மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தில் செய்தியாளர்களிடம் கருத்துரைக்கும் போது கூறினார்.
போர்ட் டிக்ஸன் எம்.பி.யான அவர், அதிகாரப் பரிமாற்றங்களைப் பற்றி விவாதிப்பதற்கான தடைகள் ஏதும் இல்லை என்று கூறினார்.
“பிரதமரின் பதில் குறித்து நான் விவாதிக்கவில்லை என்று சிலர் சொல்கிறார்கள், நான் பிரதமரின் இக்கருத்தை வரவேற்கும் அதேவேளையில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்,” என்று அவர் கூறினார்.
அண்மையில் பக்காத்தான் ஹரபான் ஆட்சியின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு ஊடகவியலாளர்களுடன் ஒரு சிறப்பு நேர்காணலில், டாக்டர் மகாதிர் தாம் வாக்குறுதியளித்தபடி அன்வாரிடம் பிரதமர் பதவியை ஒப்படைப்பேன் என்று மீண்டும் உறுதிப்படுத்தினார்.