அமைச்சரவை மாற்றம் வந்தால் மாபுஸ் பதவி விலகத் தயார்

மனிதவள துணை அமைச்சர் மாபுஸ் ஒமார், பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் அமைச்சரவையில் மாற்றம் செய்து தம்மைப் பதவி விலகுமாறு கேட்டுக்கொண்டால் தாம் பதவி விலகத் தயார் என்கிறார்.

கொடுக்கப்பட்ட பொறுப்பைச் சரியாக செய்யாத ஒருவரை அமைச்சரவையிலிருந்து நீக்கும் அதிகாரம் பிரதமருக்கு உண்டு என்றாரவர்.

“ஒரு அமைச்சரிடம் பலவீனம் இருந்து அதை அவர் சரிசெய்து கொள்ளவில்லை என்கிறபோது பிரத்மர் அமைச்சரவை மாற்றி அமைக்கலாம். அதற்கான உரிமை அவருக்குண்டு”, என்று மாபுஸ் கூறியதாக பெரித்தா ஹரியான் அறிவித்துள்ளது.

பிரதமரின் செய்தித்தொடர்பு மற்றும் ஊடக ஆலோசகர் காடிர் ஜாசின், திறமையாக செயல்படாத அமைச்சர்களும் மந்திரி புசார்களும், ஆட்சிமன்ற உறுப்பினர்களும் தாங்களாகவே பதவி விலகிக்கொள்வது நல்லது என்று பரிந்துரைத்திருப்பது குறித்துக் கருத்துரைத்தபோது மாபுஸ் இவ்வாறு கூறினார்.