போலீஸ் சிறப்புப் பிரிவு, முந்தைய அரசாங்கத்தில் எதிர்ப்பாளர்களை ஒடுக்குவதற்குப் பயன்பட்டதுபோல், அரசாங்கத்தின் கைக்கருவியாகச் செயல்பட ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் அப்துல் ஹமிட் படோர் கூறினார்.
“சிறப்புப் பிரிவு குறைகூறல்களை அடக்கி வைக்கும் ஒரு கருவி அல்ல. அது அப்படிச் செயல்பட நான் அனுமதியேன்.
“புதிய நிர்வாகம் எதிர்ப்பாளர்கள் கருத்துச் சொல்வதற்கும் ஜனநாயக நடைமுறைகள் பின்பற்றப்படுவதற்கும் இடமளிப்பது பாராட்டுக்குரியது”, என அப்துல் ஹமிட் மலேசியன் இன்சைட்டுக்கு வழங்கிய நேர்காணலில் கூறினார்.
ஆனால், எதற்கும் ஓர் எல்லை உண்டு என்பதையும் அவர் நினைவுறுத்தினார்.
“எல்லை தாண்டினால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்”, என்று சிறப்புப் பிரிவின் முன்னாள் தலைவரான அப்துல் ஹமிட் கூறினார்.
நாட்டில் இன, சமய வெறுப்பு மேலோங்கி இருப்பதற்கு அரசியல்வாதிகள்தான் பொறுப்பு என்று கூறிய அப்துல் ஹமிட் அவர்கள் “பச்சோந்திகளாக” நடந்து கொள்கிறார்கள் என்றார் .
“அவர்களுக்கு நிரந்தரக் கொள்கை கிடையாது. ஒரு நாள் இங்கிருப்பார்கள் அடுத்த நாள் ஒரு வாய்ப்பு தெரியும்போது அங்கு தாவுவார்கள்.
“இன, சமய விவகாரங்களை அரசியலாக்கினால் அது நாட்டையே அழித்து விடும்”, என்றாரவர்.