மகாதிருக்கு எதிராக நம்பிக்கை-இல்லாத் தீர்மானம் என்பது அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு- கிட் சியாங்

சதிகாரர்களும் மின்வெளி செயல்பாட்டாளர்களும் பொய்மூட்டைகளை அவிழ்த்துவிடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார்கள் என்கிறார் லிம் கிட் சியாங்.

அவர்களின் பொய்களில் ஒன்றுதான் அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டுக்கு எதிராக நம்பிக்கை- இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படும் என்பது.

“மகாதிருக்கு எதிரான நம்பிக்கை- இல்லாத் தீர்மானம் என்பது கெடுமதியாளர்களின் கற்பனை என்பது அடுத்த மாதம் வந்தால் தெரிந்து விடும்”, என்று கிட் சியாங் இன்று பிற்பகல் ஓர் அறிக்கையில் கூறினார்.

அவர் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. ஆனால், ராஜா பெட்ரா கமருடின் அவரது வலைப்பதிவில் பதிவிட்டிருந்ததுதான் லிம்மை அவ்வாறு கூற வைத்துள்ளதாக தெரிகிறது.

மகாதிரைக் கவிழ்க்க அன்வார் இப்ராகிமுக்குப் போதுமான எம்பிகளின் ஆதரவு இருப்பதாக அந்த வலைப்பதிவர் கூறியிருந்தார்.

அன்வார் தரப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி, பிகேஆர் தலைவருக்கு சாபா, சரவாக்கிலிருந்து குறைந்தது 37 எம்பிகளும் தீவகற்ப மலேசியாவில் 103 எம்பிகளும் ஆதரவாக உள்ளனர் என ராஜா பெட்ரா கூறினார். மகாதிருக்கு 40 எம்பிகளின் ஆதரவுதான் உள்ளதாம்.

“நாடாளுமன்றம் விரைவில் கூடவுள்ளது. அந்த நேரத்தில் அன்வார் காய்களை நகர்த்த வேண்டும். தவறினால் அவர் அடுத்த பிரதமர் ஆகப் போவதில்லை”, என்று ராஜா பெட்ரா கூறினார்.