காலனித்துவ கொள்கையின் கீழ் தொழிலாளர்கள் பிழியப்பட்டனர். அந்த நிலமை இன்றும் உள்ளதா? நடைமுறை அரசியல் எவ்வகையில் இன்று ஏழ்மையில் வாழும் தொழிலாளர்களுக்கு வழிகாட்டும்? என்ற வினாக்களுக்கு விடை தேடும் வகையில் ஒரு நூல் வெளியீடு நாளை (3.7.2019) புதன்கிழமை மாலை 6.30-க்கு விஸ்மா துன் சம்பந்தன் மண்டபத்தில் நடைபெற உள்ளது. அதற்கு மனிதவள அமைச்சர் மாண்புமிகு ம. குலசேகரன் தலமையேற்கிறார்.
இந்தியத் தொழிலாளர்களின் நிலையை ‘சப்பி எடுக்கப்பட்ட சாத்துக்குடிகள்’ என்று வர்ணித்து காலனித்துவ ஆட்சியை வன்மையாக கண்டனம் செய்யும் வகையில் தனது முதுகல ஆய்வை மலாய பல்கலைகழகத்தில் செய்தவர் மைக்கல் ஸ்டென்சன். இவர் 1977-இல் காலமானார்.
இவரின் ஆய்வு 1980-இல் ‘தீபகற்ப மலேசியாவில் வர்க்கம், இனம் மற்றும் காலனித்துவம்” என்ற நூலாக வெளியிடப்பட்ட து. கிடைப்பதற்கு அரிதாகிவிட்ட இந்நூல் இன்று வரை ஒரு முக்கிய மைல்கல்லாக திகழ்கிறது. இதன் முக்கியத்துவம் கருதி மீண்டும் இந் நூலை மறுபிரசுரம் செய்துள்ளனர் சில நல்லுள்ளங்கள்.
ஆங்கில மொழியில் உள்ள இந்த நூலானது ஒரு முக்கியமான ஆவணமாக திகழ்கிறது என்கிறார் சுவராம் மனித உரிமை அமைப்பின் இயக்குனர் வழக்கறிஞர் கா. ஆறுமுகம். “இந்தியர்கள் பற்றிய ஓர் ஆழமான ஆய்வாக உள்ளது, கற்பனையற்ற உண்மை கருத்துக்களை உள்வாங்கும் போது இந்தியர்கள் எப்படியெல்லாம் சுரண்டப்பட்டனர், எப்படி வெகுண்டனர் என்ற சமூக அரசியல் விழிப்புணர்வை உண்டாக்குகிறது” என்கிறார்.
இன அடிப்படை அரசியல் தொழிலாளர்களாக உள்ள மலேசிய மக்களுக்கு தீர்வாக அமையாது என்றும், இந்தியர்களின் நலனை காக்க மேற்குடி மக்களின் தலமைத்துவம் போராடாது என்றும் அதற்கான தீர்வு வெகுசன மக்களின் போரட்டத்தின் வழியே உருவாக முடியும் என்கிறார் ஸ்டென்சன். ஹிண்ட்ராப் போராட்டம் ஸ்டென்சனின் கருத்தை மெய்பித்துள்ளது எனலாம்.