உள்துறை அமைச்சர் முகைதின் யாசின், இளைஞர்களின் உச்ச வயது 30ஆ 40 ஆ என்று வரம்பு கட்டும் விவகாரத்தில் ஜோகூர் அரசு இரண்டு நாள்களில் இரண்டு முறை பல்டி அடித்ததைத் தொடர்ந்து மாநில நிர்வாக விவகாரங்களில் ஜோகூர் அரண்மனையின் தலையீடு இருக்கக்கூடாது என்று விரும்புகிறார்.
அந்த விவகாரத்தில் அரண்மனை அதன் கருத்தைத் தெரிவித்திருப்பதாக தெரிகிறது என்றாரவர். ஆனால், அவரைப் பொறுத்தவரை நாடு முழுக்க ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைகளை ஜோகூர் மாநில அரசும் ஏற்றுக்கொள்வதற்குத் தடை இருக்கக்கூடாது என்று நம்புகிறார்.
“இவ்விசயத்தில் அரண்மனையைச் சந்தித்து நிலைமையை விளக்குமாறு மந்திரி புசாரையும் ஆட்சி மன்றத்தையும் கேட்டுக்கொள்கிறேன். அரண்மனை தலையீடு இருக்கக் கூடாது. அவர்கள் கருத்துத் தெரிவிக்கலாம். கொள்கைகள் எல்லா மாநிலங்களிலும் ஒரே மாதிரியாக இருப்பதுதான் நல்லது”, என்று முகைதின் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
திங்கள்கிழமை ஜோகூர் மந்திரி புசார் ஸஹ்ருடின் ஜமால் பெயரில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்று இளைஞர்களின் உச்ச வயதை 40-இலிருந்து 30ஆகக் குறைக்கும் மத்திய அரசாங்கத்தின் முடிவை மாநில அரசு ஏற்காது என்று அறிவித்திருந்தது.