அஸ்மினும் நானும் இன்னும் ஓர் அணிதான்

பிகேஆரில் கட்சியே இரண்டாக உடையும் அளவுக்கு நெருக்கடி மிகுந்திருப்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான் என்றாலும், அதன் தலைவர் அன்வார் இப்ராகிம், தாமும் துணைத் தலைவர் அஸ்மின் அலியும் இன்னும் “ஓர் அணிதான்”, என்று கூறுகிறார்.

அஸ்மினைச் சம்பந்தப்படுத்தும் பாலியல் காணொளி காரணமாக அன்வார் ஆதரவாளர்களும் அஸ்மின் ஆதரவாளர்களும் இரு முகாம்களாக பிரிந்து கிடக்கும் வேளையில் அவர் இவ்வாறு கூறியது வியப்பளிக்கிறது.

“அஸ்மின் கட்சித் துணைத் தலைவர். நாங்கள் இருவரும் ஓர் அணியாக இருந்துதான் செயல்பட வேண்டும், அடிக்கடி சந்திக்க வேண்டும், கலந்துரையாட வேண்டும்.

“அது ஒரு அணி. கடந்த கட்சித் தேர்தலில் அவருக்கு (துணைத் தலைவராக இருக்க) அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது”, என இன்று போர்ட் டிக்சனில் செய்தியாளர் கூட்டமொன்றில் அன்வார் கூறினார்.

போர்ட் டிக்சனில் நடைபெற்ற பிகேஆர் கலந்துரையாடல் கூட்டத்துக்குப் பின்னர் அச்செய்தியாளர் கூட்டம் நடைபெற்றது.

பிகேஆர் கலந்துரையாடல் கூட்டத்துக்கு அஸ்மின் வரவில்லை. கலந்துரையாடல் கூட்டத்தில் அன்வாருக்கு ஆதரவளிக்கும் தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட்டு அதில் 140 கட்சித் தலைவர்களில் 120 பேர் கையெழுத்திட்டனர்.

அன்வாரின் தலைமைத்துவத்தை ஆதரிக்கும் அத்தீர்மானத்தில் இன்னும் கையெழுத்திடாத 20 பேரில் அஸ்மின், உதவித் தலைவர் சுரைடா கமருடின் ஆகியோரும் அடங்குவர். கலந்துரையாடல் கூட்டத்துக்கு உதவித் தலைவர்கள் அலி பிஜுவும் பாரு பியானும்கூட வரவில்லை.

கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பற்றிக் கருத்துரைத்த அன்வார், கட்சி வலுப்படுத்தப்படும் என்றும் பக்கத்தான் ஹரப்பான் தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்றும் சொன்னார்.

கட்சி எதிர்நோக்கும் பிரச்னைகள் பற்றி வினவியதற்கு, கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பிரச்னைகளைக் கடந்து முன்னோக்கிச் செல்வதையே விரும்புகிறார்கள் என்றார்.

“உண்மையில் பிரச்னைகள் சிறியவைதான். அவை பெரும்பாலும் பெரிதுபடுத்தப்பட்டுள்ளன”, என்றார் ஆனால், விவரிக்கவில்லை.

நாடாளுமன்றத்தில் பக்கத்தான் ஹரப்பானும் பிகேஆரும் நல்ல சீரமைப்புகளைக் கொண்டுவந்தன. ஆனால் அவற்றுக்கு முக்கியம் அளிக்கப்படவில்லை என்றார்.

“எதிர்மறை விவகாரங்களுக்கே மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இதில் தவறு எங்களுடையதுதான். ஊடகங்களைப் பொறுத்தவரை பரபரப்பான செய்திகள்தானே அவர்களுக்குப் பிடிக்கும்”, என்றார்.

கட்சியினர் மக்கள் பிரச்னைகளுக்கே முன்னிரிமை கொடுக்க வேண்டும் என்றும் அன்வார் அறிவுறுத்தினார்.

“என்ன முக்கியமான திட்டமாக இருந்தாலும் மக்களின் நலன்கள் கவனத்தில் கொள்ளப்படும்”, என்றார்.