பாலியல் விவகாரத்தில் மகாதிரின் நிலைப்பாடு அன்று ஒரு மாதிரி இன்று வேறு மாதிரி- நஜிப்

பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் 1998-இல் பிகேஆர் அன்வார் இப்ராகிமுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டபோது ஒரு மாதிரியாக நடந்து கொண்டார், கடந்த மாதம் பொருளாதார அமைச்சர் முகம்மட் அஸ்மின் அலிமீது அதேபோன்ற பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டபோது வேறு மாதிரியாக நடந்து கொண்டிருக்கிறார் என்று நஜிப் அப்துல் ரசாக் சுட்டிக்காட்டினார்.

முன்னாள் பிரதமர் இன்று பிற்பகல் டிவிட்டரில் இப்படிப் பதிவிட்டிருந்தார்: “1998-இல் இது அரசியல் பிரச்னை அல்ல ஒழுக்கநெறிப் பிரச்னை. 2019-இல் இது ஒழுக்கநெறிப் பிரச்னையாக அல்லாமல் அரசியல் பிரச்னை ஆகிவிட்டது”.

நஜிப் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை, என்றாலும், அஸ்மினைச் சம்பந்தப்படுத்தும் பாலியல் காணொளி குறித்து மகாதிர் கருத்துத் தெரித்திருந்தது பற்றித்தான் அவ்வாறு பதிவிட்டிருக்கிறார் என்பது தெளிவு.

அஸ்மின் விவகாரத்தை ஒரு அரசியல் விவகாரமாகத்தான் பார்க்க வேண்டும் என்று மகாதிர் நேற்று ஒரு வலைப்பதிவில் கூறியிருந்தார்.

“இது ஒழுக்கநெறி விவகாரம் அல்ல. அரசியல் விவகாரம். அரசியல் விவகாரம் என்ற முறையில்தான் இதற்குத் தீர்வு காண வேண்டும்”, என்றார்.