அம்னோவும் பாஸும் செப். 14-இல் ஒத்துழைப்புச் சாசனத்தில் கையெழுத்திடும்

அம்னோ தலைவர் அஹமட் ஜாஹிட் ஹமிடியும் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங்கும் இரு கட்சிகளின் ஒத்துழைப்புக்கு வழிகோலும் ஒத்துழைப்புச் சாசனத்தில் செப்டம்பர் 14-இல் கையெழுத்திடுவார்கள்.

கூட்டுக்குழு ஒன்று தயாரித்த அச்சாசனத்தையும் புரிந்துணர்வுக் குறிப்பையும் அம்னோவும் பாஸும் இறுதிசெய்து விட்டதாக இரு கட்சிகளின் தலைமைச் செயலாளர்களும் அம்னோ ஆன்லைனில் வெளியான ஒரு கூட்டறிக்கையில் தெரிவித்தார்கள்.

கையெழுத்திடும் நிகழ்வு கோலாலும்பூர் புத்ரா உலக வாணிக மையத்தில் உள்ள அம்னோ தலைமையகத்தில் நடைபெறும்.

பாஸுடன் ஒத்துழைக்க அம்னோ உச்ச மன்றம் ஒருமனதாக ஒப்புக்கொண்டிருக்கிறது என நேற்று ஜாஹிட் கூறினார்.

அம்னோ மற்றவர்களுடனும் ஒத்துழைக்க தயார் என்று கூறிய அதன் தலைவர், டிஏபியுடன் தொடர்பு வைத்துள்ளவர்களுடன் மட்டும் ஒத்துழைக்க இயலாது என்றார்.

“டிஏபியுடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கும் எந்தக் கட்சியாக இருந்தாலும் அதனுடன் மட்டும் பேச்சுக்கு இடமில்லை”, என்றவர் சொன்னார்.