கொண்டெய்னர் எனும் கொள்கலனில் தமிழ்பள்ளி மாணவர்கள் – இராகவன் கருப்பையா

நம் நாட்டு தமிழ் பள்ளி மாணவர்கள் அண்மைய காலமாக புரிந்து வரும் பல்வேறு உலக சாதனைகளை நினைத்துப் பார்க்கும் போது மனம் நெகிழாமல் இருக்க முடியவில்லை.

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி – ஒவ்வொன்றும் இன்ப அதிர்ச்சி என்று சொன்னால் அது மிகையாகாது.

நம் செல்வங்கள், குறிப்பாக விஞ்ஞான ஆராய்ச்சிகளிலும் கண்டுபிடிப்புக்களிலும் அனைத்துலக ரீதியில் படைத்து வரும் சாதனைகளை வைத்துப்பார்த்தால்  நம்மிடையே  நூற்றுக்கணக்கான ‘அப்துல் கலாம்கள்’ உருவாகிக் கொண்டிருக்கிறார்கள் என்பதில் துளியளவும் சந்தேகமில்லை.

அரசாங்கமும் அரசு ஊடகங்களும் இது போன்ற சாதனைகளை விளம்பரப்படுத்தி ஆதரவு கொடுக்கின்றனவோ இல்லையோ, தமிழ் பத்திரிகைகள் சிறப்பாக செய்திகள் வெளியிட்டு போதிய அளவு ஊக்கமளிப்பதை நாம் மறுக்க முடியாது.

இந்த இளம் சாதனையாளர்களுக்கு பயிற்சியளித்து அவர்களை வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று அனைத்துலக போட்டிகளில் பங்கேற்கச் செய்வதற்கும் கண்காட்சிகளில் கலந்து கொள்ள வகை செய்வதற்கும் ஆசிரியர்கள் ஆற்றி வரும் அளப்பறிய பங்கை நாம் இங்கு நினைவு கூறத்தான் வேண்டும்.

இத்தகைய அபரித வளர்ச்சியை சர்வதச அளவில் சர்வ சாதாரணமாக நம் பிள்ளைகள் கொண்டு சென்றுள்ள இந்நிலையில், பஹாங் மாநிலத்தில் ஒரு தமிழ் பள்ளிக்கூடம் கொள்கலனுக்குள் இயங்கி வருவதுதான் நம் மனதை உருக்கும் மிகவும் வேதனையான விஷயம்.

குவாந்தான் நகரில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த ஜெராம் தோட்டத் தமிழ் பள்ளி கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக இப்படித்தான் இயங்கி வருகிறது என்பது அதிர்ச்சி தகவல். ‘என்ன கொடுமை சார் இது!’

பெரும்பாலும் கட்டுமானப் பகுதிகளில் இடைக்கால அலுவலகங்களாக செயல்படும் ‘கொண்டெய்னர்’ எனப்படும் இந்த கொள்கலனில், முதலாம் வகுப்பில் இருந்து 3ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பயில்கின்றனர். நான்காம் வகுப்பில் இருந்து 6ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் வகுப்பறைகள் தோட்ட நிர்வாகம் அமைந்துள்ள அலுவலகத்தில் செயல்படுகின்றன.

நாடு சுதந்திரம் அடைந்த அதே 1957ஆம் ஆண்டில்தான் இந்த பள்ளிக்கூடமும் தோற்றுவிக்கப்பட்டது. ஆனால் நாடு அடைந்த வளர்ச்சிக்கேற்ப இந்த பள்ளிக்கூடக் கட்டிடமும் மாணவர்களுக்கான வசதிகளும் மேம்பாடு காணவில்லை என்பதுதான் சோகம்.

ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் கட்டிடம் பழுதடைந்து சீர் செய்ய முடியாத நிலை ஏற்பட்ட போது, தற்காலிகமாக இந்த கொள்கலனுக்குள் கல்வியைத் தொடர்ந்தனர் மாணவர்கள். அந்த தற்காலிகம்தான் தற்போது 22 ஆண்டுகளை விழுங்கிக் கொண்டு இன்னும் தற்காலிகமாகவே உள்ளது.

கடந்த 2000ஆம் ஆண்டிலிருந்து பல தடவை பலதரப்பட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் கூட, ம.இ.க. உள்பட அப்போதைய அரசாங்கத்தில் எந்த நாதியும் இவர்களை கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. அரசாங்கத்தின் பார்வைக்காக ஏங்கித் தவிக்கும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் நிலை, ‘எருமை மாட்டின் மேல் பெய்த மழை’ போலத்தான் – இன்று வரையில்.

எனினும் சுமார் 5 ஆண்டுகளுக்கு முன் அப்பகுதியில் புதிய பள்ளிக்கூடத்தை நிர்மாணிப்பதற்கு நிலம் ஒதுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் இன்னும் ஒரு துரும்புக் கூட அங்கு ஊன்றப்படாத நிலையில் வெறிச்சோடிக் கிடக்கிறது நிலம்.

இந்த காலக்கட்டத்தில் கல்வித் துணையமைச்சராக ம.இ.க.வின் ப.கமலநாதன் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தற்போதைய கல்வித் துணையமைச்சர் தியோ நீ சிங்கை சந்தித்து இது குறித்து முறையிட்ட பிறகும் கூட இதற்கான விடிவுகாலத்துக்குறிய அறிகுறி எதனையுமே காணவில்லை என பள்ளி நிர்வாக வாரியத்தின் தலைவர் டத்தோ கே.நடேசன் அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.

புதிய பள்ளிக்கூடத்தை கட்டுவதற்கு நியமிக்கப்பட்ட குத்தகையாளர் வேரு ஒரு சட்ட சிக்கலில் மாட்டியுள்ளதால் இந்த கட்டிடத்தை கட்ட முடியாத இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது என்று நம்பப்படுகிறது.

இந்த சாக்குப் போக்கெல்லாம் விவேகமானதாகவும் ஏற்புடையதாகவும் தெரியவில்லை. அப்படியென்றால் இன்னும் எவ்வளவு நாள்களுக்குதான் நம் செல்வங்கள் கொள்கலனுக்குள் அவதிப்படுவது? கல்வியமைச்சர் மஸ்லி மாலிக், இருள் சூழ்ந்திருக்கும் ஜெராம் தோட்ட தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு எப்போது வெளிச்சத்தைக் காட்டுவார்?