பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமிக்கும் பிரதமர்துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்திக்குமிடையிலான வாய்ச் சண்டை ஓய்வதாகத் தெரியவில்லை.
“இந்திய ஏழை மக்களுக்கான நிதி உதவிகள் மித்ரா போன்ற அமைப்புகளின்வழி கொடுக்கப்படுவது குறித்து ட்ரேன்பேரன்சி இண்டர்நேசனல் (டிஐ) அமைப்பு முன்வைத்த கருத்துகளால் வேதமூர்த்தி ஆத்திரமடைந்திருப்பதைக் காண பரிதாபமாக இருக்கிறது.
“ஏழை மக்களுக்கு உதவிகள் நேரடியாக வழங்கப்பட வேண்டும் என்று டிஐ கூறுவதை நான் ஏற்கிறேன். என்ஜிஓ-கள் மூலம் உதவிகள் வழங்கும் முறையால் உதவிகள் செல்ல வேண்டிய இடத்துக்குச் செல்வது தடைப்படுகிறது என்பதுடன் அது தவறுகள் நிகழவும் ஊழல்கள் தலைதூக்கவும் வழிகோலுகிறது”, என்று இராமசாமி கூறினார்.
நல்ல கருத்துகள் முன்வைக்கப்பட்டால் ஏற்பதை விடுத்து, நேரடி உதவி வழங்க விதிமுறைகளும் ஒழுங்குமுறைகளும் குறுக்கே நிற்பதை அறியாமல் பேசுகிறார்கள் என்று வேதமூர்த்தி அவர்களைக் குறைகூறுவதைப் பார்க்க வருத்தமாக உள்ளது என்று அவர் சொன்னார்.
ஏழைகளுக்கு உதவிகளை நேரடியாக அளிப்பதற்குக் குறுக்கே நிற்கும் தடைகள் குறித்து விவாதிக்க விரும்பவில்லை என்றும் சட்டங்கள், நடைமுறைகளைவிட ஏழைகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே முக்கியம் என்றும் அவர் கூறினார்.
“ரிம100 மில்லியன் அரசாங்கத்திடமிருந்து கிடைத்தவுடனேயே சட்ட, நடைமுறைச் சிக்கல்களுக்கு முடிவு கண்டிருக்க வேண்டியதுதானே இப்போது கேள்விகள் கேட்கப்படும்போது அவற்றைக் குறிப்பிடுவது ஏன்”, என இராமசாமி வினவினார்.
இந்திய ஏழைகளின் தேவைகளை நிறைவு செய்ய மித்ரா ஒரு சரியான அமைப்புத்தானா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
“பிஎன் ஆட்சியில் இருந்த செடிக் இப்போது இல்லைதான். ஆனால், மித்ரா எந்த வகையில் அதிலிருந்து மாறுபட்டிருக்கிறது?
“இந்த விவகாரம் பற்றிச் சிந்திக்கவும் சரியான நடவடிக்கைகள் எடுப்பதற்கும் போதுமான கால அவகாசம் இருப்பதாகவே நான் நினைக்கிறேன்.
“மீண்டும் சொல்லிக் கொள்கிறேன். வேதமூர்த்திக்கு எதிராக எனக்குத் தனிப்பட்ட விரோதம் எதுவும் இல்லை. அரசாங்கத்துக்கும் பிரதமருக்கும் மட்டும் அவர் வெளிப்படையாக இருப்பது போதாது, இந்திய மக்களிடத்திலும் அவர் வெளிப்படையாக இருத்தல் வேண்டும்”, என்றாரவர்.