சொந்த நாட்டைக் கீழறுப்பு செய்த குற்றத்திலிருந்து தப்பிக்க இங்கே அடைக்கலம் தேடிப் பதுங்கியிருக்கும் ஒரு தேசத் துரோகி மலேசியர்களுக்குத் தேசப் பற்றைப் பற்றி கீழ்தரமான வகையில் உபதேசம் செய்வது வன்மையான கண்டதிற்குறியது என்கிறார் நீர்,நிலம் மற்றும் இயற்கைவள அமைச்சருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.
மேலும் தனது அறிக்கையில், மலேசிய இந்தியர்கள் யாருக்கு விசுவாசமானவர்கள் என்பதனைக் கண்டுபிடிக்க ஸக்கீர் நாயக் போன்ற குள்ள நரிகள் நமக்குத் தேவையில்லை என்கிறார் சேவியர். மேலும் தனதறிக்கையில்,
“கடந்த தேர்தலில் ஆட்சி மாற்றத்துக்கு மட்டும் முன் நின்று போராடாமல், நாடு பெரிய கடன் தொல்லையிலிருந்து மீள, பொது நிதியை ஏற்படுத்துபதிலும் ஓர் ஏழைச் சமூகமான மலேசிய இந்தியர்கள் முன் நின்றனர் என்பதனைப் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது நன்கு அறிவார்”
பிரதமர் துன் மகாதீருக்கு இந்தக் குள்ள நரியின் ஆலோசனை தேவை படாது. மலேசியாவில் பல இனங்களுக்கு இடையே நீண்ட காலமாக நிலவி வரும் சகோதரத்துவம், ஒற்றுமைக்கு ஸக்கீர் நாயக் போன்று குள்ளநரிகளால் குந்தகம் ஏற்படும் என்று அஞ்சியே அவர் மலேசியாவில் தங்க மலேசிய இந்தியர்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வந்தனர்.
மலேசிய இந்தியர்களின் கணிப்பு சரியானது என்பதனை நாட்டுக்கு உணர்த்தும் வண்ணம் மற்றவர்களை மலேசிய இந்தியர்களுக்கு எதிராக தூண்டிவிடும் காரியத்தைத் தொடங்கி விட்டார் நாயிக்.
இது நாட்டுக்கு நன்மையல்ல, அது போன்ற கீழறுப்பு செயல்களை நாம் சகித்துக் கொள்ள முடியாது. அவர் மீது அரசாங்கம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாளைய அமைச்சரவை கூட்டத்தில் வலியுறுத்த இருப்பதாகக் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவரும் கோல லங்காட் நாடாளுமன்ற உறுப்பினருமான சேவியர் ஜெயக்குமார் கூறினார்.