இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஸக்கீர் நாய்க் வெளியேற்றப்படவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு நெருக்குதல் கொடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவையில் உள்ள நீர், நிலம் மற்றும் இயற்கைவள அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் பல்லூடக தொடர்புத்துறை அமைச்சர் கோபின் சிங், மற்றும் மனிதவள அமைச்சர் எம். குலசேகரன் ஆகியோர் ஸக்கீர் நாய்க்கை மலேசியாவிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று அமைச்சரவையில் பேசியதாக அறிவித்துள்ளனர்.
இன்று நடந்த அமைச்சரவை கூட்டதிற்கு பிந்திய தகவலின் படி ஸக்கீர் நாய்க்க்கு ஆதரவு நல்கி வந்த பிரதமர் துன் மகாதீர் அவர்கள் தனது கருத்தை பரிசீலனை செய்ய ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது.
இந்தியாவில் பண பரிவர்த்தனை குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள ஸக்கீர் நாய்க் அவருக்கு வழங்கப்பட்டுள்ள நிபந்தனைகளை மீறி இந்நாட்டில் இஸ்லாமியர்களுக்கும் இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கும் இடையே பிணக்கை உருவாக்கும் விதமாக கிளாந்தான் மாநில கோத்தா பாருவில் உரை நிகழ்த்தி உள்ள செயல் கடும் கண்டனத்திற்குரியதாகும்.
இதனை அமைச்சரவையில் பிரதமர் டாக்டர் துன் மகாதீர் கவனத்திற்கு கொண்டு வந்தாகவும் ஸக்கீர் நாய்க் மீது விரைவான நடவடிக்கையின் அவசியத்தை வலியுறுத்தியதாக கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவரும் கோல லங்காட் நாடாளுமன்ற உறுப்பினருமன சேவியர் ஜெயக்குமார் தனது பத்திரிக்கை செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நாட்டின் சரித்திரத்தை சற்றும் அறியாமல் அவர் மலேசிய இந்தியர்களின் உணர்வுகளை சீண்டி பார்த்ததுடன், சீன சமுதாய உரிமைகள் மீதும் கூட கேள்வி எழுப்பியுள்ளார். இது நாட்டு மக்களிடையே அதிக ஆத்திரத்தையும், வெறுப்புணர்ச்சியையும் தூண்டி விடும் தண்டனைக்கு உரிய செயலாகும் என்கிறார் சேவியர் ஜெயக்குமார்.
கடந்த 9-ஆம் தேதி கோத்தாபாருவில், பல்லாயிரக்கணக்கான மலாய்காரர்களின் மத்தியில் உரையாற்றிய ஸக்கீர் நாய்க், மலேசியாவில் வாழும் இந்துக்கள் இங்குள்ள பிரதமரை விட இந்திய பிரதமர் மோடியைதான் அதிகம் நேசிப்பதாக சாடினார். அதோடு தன்னை இங்கிருந்து அகற்றும் வேண்டுமானால் இதற்கு முன்பு வந்த சீனர்களும் வெளியாக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
இச் செயல் மிக கடுமையானதாக அரசாங்கம் எடுத்துக் கொள்ள வேண்டும். இது இந் நாட்டில் நிலவிவரும் அமைதிக்கு பாதகம் விளைவிக்கும் செயல் என்பதால் விரைந்து பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மற்ற அமைச்சரவை சகாக்களும் தானும் கேட்டுக் கொண்டதாக சேவியர் ஜெயக்குமார் தனது பத்திரிக்கை செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
சக்கீர் நாயக் மலேசியாவில் தம் மத போதனை செய்வதில்
தவறில்லை. மற்ற இனத்தவரை குறை கூறக் கூடாது. மும்பாய்காரான இவர் இந்திய காவல் துறையினரால் தேடி வரப்படும் ஒரு குற்றவாளி.இந்நாட்டில் இவருக்கு அடைக்கலம் கொடுக்கக் கூடாது. மலேசியாவில் இருந்து இவரை வெளியாக்க அமைச்சரவையில் மேலும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.