பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், அவரது கொள்கைகளை எதிர்க்கும் அமைச்சர்களைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்கிறார் பாஸ் தலைமைச் செயலாளர் தகியுடின் ஹசான்.
கூட்டரசு அரசமைப்பு பிரிவு 43(2)(பி)-இன்படி , பேரரசரால் நியமிக்கப்படுபவர்தான் அமைச்சர். பேரரசரும் பிரதமர் பரிந்துரைப்பவர்களைத்தான் அமைச்சர்களாக நியமிக்கிறார்.
“எனவே, அமைச்சர்கள் தேசிய கொள்கைகளைப் பொறுத்த விவகாரங்களில் பிரதமருக்கு மாறுபட்ட நிலைப்பாட்டைக் கொண்டிருக்க முடியாது. அதுவும் அமைச்சரவைவழி அரசாங்கம் முடிவெடுத்த விசயங்களில்.
“அப்படிச் செய்வது அமைச்சர்கள் பொறுப்புமீறிச் செயல்படுவதாக அமையும். அதைக் கீழ்படியாமை என்றுகூட கருதலாம்”, என தகியுடின் இன்று பிற்பகல் அறிக்கை ஒன்றில் கூறினார்.
அந்த வகையில் பிரதமருடன் ஒத்துப்போகாத அமைச்சர்கள் நாட்டில் குழப்பமும் நிலைத்தன்மையின்மையும் ஏற்படாதிருக்க பதவி விலகுவதே நல்லது என்றார்.