தேர்தல் சீர்திருத்தம் தொடர்பில் தான் விடுத்த எட்டுக் கோரிக்கைகளில் ஐந்து, பிஎஸ்சி என்ற நாடாளுமன்றத் தேர்வுக் குழு அறிக்கையில் காணப்படவில்லை என்று பெர்சே 2.0 கூறுகிறது
அத்துடன் அழியா மை தவிர மற்ற கோரிக்கைகளில் ஒரு பகுதி மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக அது தெரிவித்தது.
“13வது பொதுத் தேர்தல் நியாயமானதாகவும் தூய்மையானதாகவும் இருப்பதை உறுதி செய்வதற்கு அந்த எட்டு கோரிக்கைகளும் குறைந்தபட்சத் தேவைகள் என்பதை பெர்சே, 2.0 பிஎஸ்சி-க்கும் இசி என்ற தேர்தல் ஆணையத்துக்கும் நினைவுபடுத்த விரும்புகிறது.”
“தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான நெருக்குதலைத் திசை திருப்புவதற்கு பிஎஸ்சி-யைப் பயன்படுத்தும் எந்த முயற்சியையும் பொது மக்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள்”, என்றும் சுதந்திரமான நியாயமான தேர்தல்களுக்குப் போராடும் அந்த அமைப்பு ஒர் அறிக்கையில் கூறியுள்ளது.
குறைந்தபட்சம் பிரச்சாரக் காலத்தை 21 நாட்களாக வைத்திருப்பது, ஊடகங்களில் நியாயமான இடம், தேர்தலின் போது பொது நிறுவனங்களைக் கட்டுக்குள் வைப்பது, ஊழல் நடைமுறைகள், கறை படிந்த அரசியல் ஆகியவற்றுக்கு எதிரான நடவடிக்கைகள் ஆகியவை இன்னும் ஏற்றுக் கொள்ளப்படாத ஐந்து கோரிக்கைகளாகும்.
நியாயமற்ற முறையில் தேர்தல் தொகுதி எல்லைகள் பிரிக்கப்பட்டுள்ள பிரச்னைக்கும் அந்த அறிக்கை தீர்வு காணவில்லை என்பது வருத்தமளிக்கிறது என்றும் பெர்சே குறிப்பிட்டது.
“பெர்சே 2.0ம் மற்ற குடிமக்களும் தேர்தல் தொகுதிகளை நிர்ணயிக்கும் முறைகளில் காணப்படுகின்ற குறைபாடுகள் குறித்து விரிவாக தெரிவித்த போதிலும் அவை பற்றி எந்தப் பரிந்துரையும் செய்யப்படவில்லை என்பதை நாங்கள் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.”
“தேர்தல் தொகுதி எல்லைகளை நிர்ணயம் செய்வதற்கு இப்போது பின்பற்றப்படுகின்ற வழிமுறைகள் சீரமைக்கப்பட வேண்டும். அப்போதுதான் ஒவ்வொரு வாக்குக்கும் அதற்குரிய மதிப்பு உறுதி செய்யப்படும்”, என பெர்சே குறிப்பிட்டது.
தேர்தல் சீர்திருத்தங்கள் மீது பிஎஸ்சி வழங்கிய இடைக்கால அறிக்கை புதன்கிழமை மக்களவையில் சமர்பிக்கப்பட்டது.
கோலாலம்பூரிலும் கோத்தா கினாபாலுவிலும் நடத்தப்பட்ட இரண்டு சுற்று பொது விசாரணைகளுக்குப் பின்னர் அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டது.