நஜிப் மீண்டும் பிஎன் தலைவராக வேண்டும்- அம்னோ இளைஞர்

அம்னோ இளைஞர் நிர்வாகக் குழு உறுப்பினர் ஷாருல் நஸ்ருன் கமருடின் பிஎன் உறுப்புக் கட்சிகள் நஜிப் அப்துல் ரசாக்கை மீண்டும் பிஎன் தலைவராக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

அம்னோ, மசீச, மஇகா தலைவர்கள் ஹிஷாமுடின் உசேனை பிஎன் தலைமைச் செயலாளராக நியமிக்க உடன்பட்டிருப்பதாக ஒரு செய்தித் தளம் தெரிவித்திருப்பதை அடுத்து அவர் அப்படி ஒரு கருத்தை முன்வைத்தார்.

நஜிப் திரும்பி வந்து அக்கூட்டணிக்குத் தலைமை ஏற்க மிகவும் தகுதியானவர் என்று கூறிய ஷாருல், நஜிப் பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கத்துக்கு எதிராக தொடர்ந்து போராடி வருவதைச் சுட்டிக்காட்டினார்.

அவருடன் ஹிஷாமுடினை ஒப்பிட்டால், கடந்த ஆண்டு 14வது பொதுத் தேர்தலில் பிஎன் தோல்வியுற்றதை அடுத்து ஏதோ ‘விடுப்பில் சென்று விட்டது’போல் கம்முன்னு இருக்கிறார் என்றார்.

பக்கத்தான் அரசாங்கத்தின் கொள்கைகள் தோல்வியுற்றதைச் சமூக வலைத்தளங்களில் வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிறார் நஜிப். மேலும், தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை எல்லாம் எதிர்த்துப் போராடி வரும் நஜிப்பை இளைஞர்கள் ஒரு போராளியாகப் பார்க்கிறார்கள் எனவும் ஷாருல் கூறினார்