மகாதீர், முகாபேவாக உருவாகுவதை தடுக்க வேண்டும்  – இராகவன் கருப்பையா

முப்பது நாட்களுக்கு முன்பு (6.9.2019) உலக வரலாற்றின் ஒரு முக்கிய போராளியும், இராஜ தந்திரியும், பழுத்த  அரசியல்வாதியாக ஒரு நாட்டின் பிரதமராகவும் அதிபராகவும்  இருந்த ஒருவர் தனது 95 ஆவது வயதில் சிங்கப்பூரில் காலமானர். அவருக்கு அரசு மரியாதைகள்  கொடுக்கப்பட்டும், பெரும்பான்மையான மக்கள் அவரது இரங்கள் தினங்களில் பங்கேட்கவில்லை.

அதற்கு காரணம், அவர் மீது மக்கள் வைத்திருந்த மதிப்பும் மரியாதையும் வெருப்பாக மாறியதுதான்.  1980 இல் இருந்து பல்வேறு வழி முறைகளில் அவர் 2017 –வரையில் அதிகாரம் கொண்ட பதவியில் தன்னை அமர்த்திக்கொண்டிருந்தார்.  அவர்தான் இராபர்ட் முகாபே, ஜிம்பாப்வேவின் அதிபர்.

இக்கட்டான சூழலில் மீண்டும் பிரதமரான நமது மகாதீர், நமக்கு கிடைத்த ஒரு சிறந்த அரசியல் தலைவர். அவர் தான் 3 ஆண்டுகள் வரை பிரதமராக இருப்பேன், அதன் பிறகு தகுந்த வேட்பாளரிடம் பதவியை ஒப்படைப்பேன் என 2 வாரங்களுக்கு முன்பு நியூயோர்க்கில் நடைபெற்ற ஒரு கலந்துரையாடல் நிகழ்வில் அவர் குறிப்பிட்டார்.

ஆகக்கடைசியாக கடந்த வாரம் இது குறித்து கருத்துரைத்த மகாதீர், ‘நான் இன்னும் நிறைய வேலை செய்ய வேண்டியிருக்கிறது, எனவே பதவி ஒப்படைப்புத் தேதியை இப்போதைக்கு நிர்ணயிக்க முடியாது என திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.

இந்த போக்கு நமக்கு முகபேவை ஞாபமூட்டுகிறது.

இவர் தொடக்கியுள்ள வேலைகளை இவர்தான் முடிக்க வேண்டுமா? அன்வாரால் அதனைத் தொடர முடியாதா? அவர் 21 ஆண்டுகளுக்கு முன் நிதியமைச்சராகவும் துணைப்பிரதமராகவும் இருந்த அனுபவமிக்க ஒரு அரசியல்வாதி என்பது மகாதீருக்குத் தெரியாதா?

அமெரிக்காவில் அவர் அன்வாரின் பெயரைக்கூட குறிப்பிடவில்லை – ‘வேட்பாளர்’ என்று மட்டுமே கூறினார். முன்பு அவர் பிரதமராக இருந்த காலத்தில் அவர் தேர்வு செய்த படாவி மற்றும் நஜிப் ஆகிய இரு வேட்பாளர்களின் லட்சணத்தைதான் நாம் பார்த்தோமே!

ஆக பிரதமர் பதவியை அன்வாரிடம் ஒப்படைப்பது தொடர்பாக மகாதீர் இப்படி மாறி மாறி பேசி வருவது இது முதல் தடவையல்ல. சுயமாகத்தான் பேசுகிறாரா அல்லது வயது முதிர்ச்சியின் பேரில் ஏற்படும் ஞாபக மறதியினால் அவர் அவதிப்படுகிறாரா என்ற குழப்பத்தை தருகிறது.

பக்காத்தான் ஹராப்பானில் உள்ள பங்காளிக் கட்சிகளுடன் கடந்த ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, முதல் 2 ஆண்டுகளுக்கு மகாதீரும் அதனைத் தொடர்ந்து அன்வாரும் பிரதமராக நாட்டை நிர்வகிக்க வேண்டும்.

இதன்படி இன்னும் 7 மாதங்களில் மகாதீர் பிரதமர் பதவியை அன்வாரிடம் ஒப்படைக்க வேண்டும்.

தேர்தல் வாக்குறுதிகள் ‘பைபல்’ இல்லை. அந்த வாக்குறுதிகள் கல்லில் எழுதப்படவில்லை என்று தேர்தல் வெற்றிக்குப் பின் அவர் பேசியதையும் நாம் மறந்துவிட முடியாது. தேர்தலில் வெற்றி பெற்றால் ‘டோல்’ கட்டணங்கள் நிறுத்தப்படும் என்று நாங்கள் சொல்லவில்லை என்று இப்போது வாதிடுகின்றார்.

இதற்கிடையே அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகளைப்போல் ‘ஆமாம் சாமி’களாக இருப்பது அவருக்கு மேலும்  கொண்டாட்டமாகிவிட்டது என எண்ணத் தோன்றுகிறது.

வயதுக்கும் பதவிக்கும் மதிப்பளிக்கும் அதே வேளையில், தவறு நடக்கிறது என்றால் அதனை சுட்டிக் காட்டத்தான் வேண்டும். அவருக்கு பயப்படவேண்டிய அவசியமில்லை. ‘நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே’ என்று அவருக்கு உணர்த்த வேண்டும்.

கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ மட்டுமே இதனை அடிக்கடி வலியுறுத்தி வருகிறார். மகாதீரின் அனைத்து செயல்பாடுகளுக்கும் கருத்துகளுக்கும்  சற்றும் சிந்திக்காமல் இணங்கிப் போய்க்கொண்டே இருந்தால், முன்னால் பாரிசான் அரசாங்கத்திற்கும் பக்காத்தான் அரசுக்கும் வித்தியாசம் இல்லாத நிலைதான் என்பதனை அமைச்சர்கள் உணர வேண்டும்.

ஆட்சி மாற்றத்திற்கு அவர் ஆற்றிய அளப்பரிய பங்கைத் தொடர்ந்து அவருடைய புகழ் உச்சத்தில் இருந்தது. ‘நன்றி மறப்பது நன்றன்று, நன்றல்லாது அன்றே மறப்பது நன்று’ எனும் குறளுக்கு ஏற்ப, ஊழல் அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு அவர் மேற்கொண்ட அரும்பணிகளை மக்கள் மறக்கவில்லை.

ஆனால் காலப் போக்கில் மக்களின் அபிலாஷைகளுக்கு செவிசாய்க்காமல் தன்னிச்சையாகத் தொடர்ந்தாற்போல் அவர் எடுத்துவரும் முடிவுகளினால் அவருக்கு எதிரான அலைகள் மேலோங்கத் தொடங்கிவட்டன.

அன்றாடம் தாம் 18 மணி நேரம் வேலை செய்வதாக அமெரிக்காவில் அவர் குறிப்பிட்டது சற்று வேடிக்கையாகத்தான் உள்ளது. பல்வேறு பிரச்னைகளை ஒருசேர சுமந்து நிற்கும் நாடொன்றுக்கு பிரதமராக இருக்கும் 94 வயதுடைய ஒரு முதியவருக்கு இது சாத்தியமா?

மகாதீரின் இந்த போக்கு, ஜிம்பாப்வே அதிபர் இராபர்ட் முகாபேயைத்தான்  நமக்கு நினைவுபடுத்துகிறது. தமது நாட்டின் மறுமளர்ச்சிக்கு வித்திட்ட அவர், ஒட்டு மொத்த மக்களின் புரட்சித் தலைவராகப் போற்றப்பட்டார். ஆனால் காலப்போக்கில் அவருடைய நிர்வாகக் கோளாறினால் ஜிம்பாப்வே மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டதைத் தொடர்ந்து, பதவி வீழ்த்தப்பட்டார்.  ‘டோன் ஓவர்ஸ்தே யோர் வெல்கம்’ என்பதனை அவர் உணரவில்லை.

இதே போன்று மகாதீரும் தமது புதல்வர் டத்தோ முக்ரீஸை அரசாங்கத்தில் ஒரு உயரிய பதவிக்குக் கொண்டுவர முயல்வதாக நம்பப்படுகிறது. கெடா மாநில மந்திரி பெசாரான முக்ரீஸ், பெர்சத்து கட்சியின் துணைத் தலைவராவார்.

தமது 22 ஆண்டுகால முன்னைய ஆட்சியின் போது மகாதீர் கடைப்பிடித்த சர்வாதிகாரப் போக்கை இப்போது கிஞ்சிற்றும் அவர் செயல்படுத்த இயலாது. ஏனென்றால் பக்காத்தானில் அங்கம் வகிக்கும் இதர கட்சிகள் அவருடைய நகர்வுகளை அணுக்கமாகக் கண்கானித்து வருகின்றன. அவர் சார்ந்துள்ள பெர்சத்து கட்சியில் உள்ள சிலர் மட்டுமே அவரை வெறித்தனமாக தற்காத்துப் பேசி வருகின்றனர்.

எது எப்படியாயினும் அன்வாரிடம் பிரதமர் பதவியை ஒப்படைக்கும் தேதியை விரைவில் அறிவிப்பதன் வழி, தாழ்ந்துள்ள தமது புகழை மீண்டெழுச் செய்வதற்கு மகாதீர் வழிவகுக்க முடியும். மேலும், அந்தத் தேதி அடுத்த 7 மாதங்களுக்கிடையில் இருப்பது அவசியமாகும். மகாதீரை நாம் மூகாபேவாக உருவாக்க கூடாது. அது அவருடைய புகழை மங்கடிக்கும்.