முன்னாள் இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் (ஐஜிபி) மூசா ஹசன், தாம் பாடகி ஷீலா கமருடினை மணம் செய்து கொண்டிருப்பதாகக் கூறப்படுவதை மறுத்தார்.
தம்மை அவமானப்படுத்தவே அப்படியொரு கதை கட்டி விடப்பட்டிருக்கிறது என்று மூசா கூறியதாக உத்துசான் மலேசியா செய்தியொன்று கூறுகிறது.
“அது நானல்ல. அந்தத் திருமணத்துக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. எனக்கிருப்பது ஒரே மனைவி, ஜூரியா அஹமட். எனக்குக் களங்கம் உண்டுபண்ண முயல வேண்டாம்”, என்றவர் கூறியுள்ளார்.
மூசாவும் ஷீலாவும் மணம் புரிந்துகொண்டார்கள் என்ற செய்தியும் அதைக் காண்பிக்கும் புகைப்படமும் இணையத் தளமொன்றில் பதிவேற்றப்பட்டதை அடுத்து மூசா இவ்வாறு கருத்துரைத்துள்ளார்.
அந்தப் பாடகியைத் தமக்குத் தெரியாது என்றுரைத்த மூசா திருமணத்துக்கு ரிம15மில்லியன் செலவிடப்பட்டதாகக் கூறப்பட்டிருப்பதையும் எள்ளி நகையாடினார்.
“அவ்வளவு பணம் என்னிடம் இருந்தால் மகிழ்ந்து போவேன்”, என்றாரவர்.
இப்படியொரு செய்தியை வெளியிட்ட வலைப்பதிவர்மீது சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் மூசா கூறினார்.
செய்தியை வெளியிட்ட இணையத்தளம், யுஆர்டிவி சஞ்சிகையில் நவம்பர் 11-இலிருந்து 13வரை கோலாலம்பூரில் தம் திருமணம் நடந்தேறியதாக ஷீலால் ஒப்புகொண்டதையும் மேற்கோள் காட்டியிருந்தது.
ஆனால், தம் கணவரின் பெயரைத் தெரிவிக்க விரும்பாத ஷீலா புகைப்படத்தில் இருப்பவர் தம் கணவர் என்று கூறப்படுவதையும் மறுத்துள்ளார்.