மலேசியாமீது வர்த்தக தடை விதிக்கப்படலாம்: மகாதிர் எச்சரிக்கை

அமெரிக்காவுக்கும் சீனாவுக்குமிடையில் அதிகரித்துவரும் காப்புவரி போராட்டத்தின் விளைவாக ஏற்றுமதியை நம்பியுள்ள மலேசியாவும் வர்த்தகத் தடைகளை எதிர்நோக்கக் கூடும் எனப் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறினார்.

வர்த்தகத் தடைகளை விதிக்கப்போவது யார் என்பதை மகாதிர் குறிப்பிடவில்லை, ஆனால், கட்டுப்பாடற்ற வணிகத்தை ஆதரிக்கும் நாடுகள் இப்போது வர்த்தகத்தைப் பெருமளவில் கட்டுப்படுத்தத் திட்டமிடுவது ஏமாற்றமளிப்பதாக அவர் தெரிவித்தார்.

“அவப்பேறாக நாம் நடுவில் சிக்கிக் கொண்டோம்”, என்றவர் இன்று கோலாலும்பூரில் ஒரு மாநாட்டில் கூறினார். அமெரிக்க- சீன வர்த்தகப் போரைக் கருத்தில் கொண்டுதான் மகாதிர் அவ்வாறுரைத்தார்.

மலேசியா அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் மூன்று நாடுகளில் அமெரிக்காவும் சீனாவும் இரண்டு. மலேசிய ஏற்றுமதிப் பொருள்கள் அதிகம் சென்றடையும் நாடு சிங்கப்பூர்.

பெரு வல்லரசுகளின் மோதலினால் ஏற்படக்கூடிய தாக்கத்தைச் சமாளிக்க வட்டார நாடுகளிடையே ஒத்துழைப்பை வளர்த்துக்கொள்ள மலேசியா முக்கியத்துவம் அளித்து வருவதாக மகாதிர் கூறினார்.