அம்னோ மகளிர் பிரிவினர் தங்கள் தலைவி ஷாரிஸாட் அப்துல் ஜலிலுக்கு மகத்தான ஆதரவு வழங்கிய போதிலும் என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவன ஊழல் தொடர்பில் பதவி விலக வேண்டும் என அம்னோ உச்ச மன்ற உறுப்பினரான பாங் மொக்தார் ராடின் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
2011ம் ஆண்டுக்கான அம்னோ பொதுப் பேரவையில் கலந்து கொண்டுள்ள கினாபாத்தாங்கான் எம்பி-யான அவர், நேற்று நிருபர்களிடம் பேசினார்.
“என் நிலையில் மாற்றமில்லை. தேர்தலின் போது நமக்கு எந்தப் பிரச்னைகளும் இருக்கக் கூடாது. நான் தலைவர்களை நேசிக்கிறேன். ஆனால் என் கட்சியை நான் அதிகமாக நேசிக்கிறேன். என் நிலையில் மாற்ரமில்லை,” என அவர் சொன்னதாக சின் சியூ நாளேடு கூறியது.
அம்னோ மகளிர் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் ஷாரிஸாட் அளித்த விளக்கத்தை பாங் மொக்தார் ஏற்றுக் கொள்வாரா என அவரிடம் வினவப்பட்டது.
அதற்குப் பதில் அளித்த பாங் மொக்தார் , அந்த பிரச்னை மக்களுடன் தொடர்புடையது. தனிப்பட்ட முறையில் என்னுடன் அல்ல. ஷாரிஸாட் அளித்த பதிலில் மக்கள் மனநிறைவு கொண்டால் அதனை அவர்கள் ஏற்றுக் கொள்வர் என்றார்.
அவரைப் பொறுத்த வரையில் ஷாரிஸாட் அளித்த விளக்கம் எப்படி இருந்தாலும் கட்சிக்கு சேதம் ஏற்பட்டு விட்டது எனக் கருதுகிறார்.
ஷாரிஸாட் விளக்கத்தை பேராளர்கள் ஏற்றுக் கொண்டார்களா இல்லையா என்பது தமக்குத் தெரியாது எனக் குறிப்பிட்ட பாங் மொக்தார், பிஎன்/அம்னோ அடுத்த பொதுத் தேர்தலுக்கு எந்தத் தவறையும் கொண்டு செல்லக் கூடாது என வலியுறுத்தினார்.
எளிய நிபந்தனைகளைக் கொண்ட 250 மில்லியன் ரிங்கிட் அரசாங்கக் கடனைத் தவறாகப் பயன்படுத்தியதாக என்எப்சி தலைவரும் ஷாரிஸாட்டின் கணவருமான முகமட் சாலே இஸ்மாயில் மீது குற்றம் சாட்டப்பட்டதைத் தொடர்ந்து மகளிர் குடும்ப சமூக மேம்பாட்டு அமைச்சருமான ஷாரிஸாட் எதிர்க்கட்சிகளின் தாக்குதலுக்கு இலக்காகி வருகிறார்.