போலீஸ் சோதனைச் சாவடி தாக்கப்பட்டது ஒரு பழிவாங்கும் நடவடிக்கை- ஐஜிபி

பெர்லிஸ், பாடாங் புசார் எல்லையில் கடத்தல் செய்வது கடினமாக இருப்பதால் அதற்குப் பழிவாங்கும் நோக்கில்தான் போலீஸ் சோதனைச் சாவடிமீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக போலீஸ் நம்புகிறது.

இதுபோன்ற மிரட்டல்களுக்கு எல்லைப்புறத்தில் உள்ள பொது நடவடிக்கைப் படை (ஜிஓஎப்)யினர் அஞ்சிட மாட்டார்கள் என்று இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் அப்துல் ஹமிட் படோர் கூறினார்.

“கடத்தல்காரர்களுக்கு இடம் கொடுக்க மாட்டோம். கடத்துவது கடினமாக இருப்பதால் அடுத்து அவர்கள் சுடும் ஆயுதங்களைக் கையில் எடுக்கலாம்.

“அவர்கள் மக்களைத் தாக்கவில்லை. கடத்தல் செய்ய இடம்கொடுக்காததால் ஜிஓஎப் சோதனைச் சாவடிமீது தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்”, என்று புக்கிட் அமானில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

திங்கள்கிழமை பாடாங் புசார் போலீஸ் சோதனைச் சாவடிமீது இரவு மணி 11.20க்கும் 12.40-க்குமிடையில் பட்டாசுகள் கொளுத்தி வீசப்பட்டன.